கூட்டுறவு உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிக்கு 27 மையங்களில் எழுத்து தேர்வு: 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
சென்னை: கூட்டுறவு உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு 27 மையங்களில் நேற்று நடந்தது. இதில் 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கூட்டுறவு துறையில் மாநில ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 311 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பதவிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
மொத்தம் 27 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுத 24,335 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஆண்கள் 10643 பேர், பெண்கள் 13692 பேர் அடங்குவர். இத்தேர்வை 19,225 பேர்(79%) பேர் எழுதினர். தேர்வு நடைபெற்ற மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு நடைபெற்ற மையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தேர்வு நடைபெற்ற மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.