ஊட்டி: குன்னூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் ஒரே வீட்டில் 79 பேர் இடம் பெற்றுள்ளதாக பதிவாகி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஆர்வலரும் ஓய்வுபெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான மனோகரன், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் கோடேரி சிற்றூர், குன்னூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்டது. பாகம் எண் 210, வாக்குச்சாவடி எண் 210.
இந்த பகுதிக்கான வாக்காளர் பட்டியல் கடந்த 6.01.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்தபோது வார்டு எண் 11,12,17 ஆகியவை இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்டவை என குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் 9,10 வார்டுகளின் வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். தற்போது இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்டவை வார்டு எண் 12 மற்றும் 17 மட்டுமே. வீட்டு எண் 10ல் 9 பேர், வீட்டு எண் 9ல் 14 பேர், வீட்டு எண் 11ல் 79பேர், வீட்டு எண் 12ல் 33 பேர் பெயர்கள் உள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளர் பெயர்கள் பல பகுதிகளில் சிதறிக் காணப்படுகின்றன. இப்பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிவிட்ட பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு குறைகள் உள்ள வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு வாக்குகள் திருடப்படுகின்றன என்று அரசியல் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருவதை அறிகிறோம். எனவே இந்த வாக்குச்சாவடியிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளதா? அவ்வாறு நடந்து இருந்தால் யார் அதனை செய்திருப்பார்கள்? என்று கண்டறிய வேண்டும். மேலும் 818 வாக்காளர்கள் உள்ள ஒரு சிறிய பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இவ்வளவு குளறுபடிகள் இருப்பதால் மாவட்டம் முழுவதும் எவ்வளவு குளறுபடிகள் இருக்கும் என்ற சந்தேகம் எழுகிறது. வாக்காளர் பட்டியலில் இவ்வளவு குளறுபடிகள் இருப்பது தேர்தல் அலுவலர்களின் அலட்சியமா? அல்லது தரவுகள் பதிவேற்றும் போது ஏற்படும் கவனக்குறைவா? என்பதை கண்டறிய வேண்டும். எதிர் வரும் தேர்தலுக்கு முன்பாக இத்தகைய குறைகளற்ற வாக்காளர் பட்டியல் வெளியிடவேண்டும். இவ்வாறு மனோகரன் தெரிவித்துள்ளார்.