குன்னூர்: குன்னூர் சிம்ஸ்பூங்கா பகுதிகளில் வளர்ப்பு கால்நடைகள் உலா வருவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகளில், சமீபகாலமாக வளர்ப்பு கால்நடைகள் சாலை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உலா வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால், அப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், சாலையில் உலா வந்து பைக்கு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதனால் சில சமயங்களில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான சிம்ஸ்பூங்கா, பெட்போர்ட் சந்திப்பு, குன்னூர் பேருந்து நிலையம் போன்ற பகுதியில் கால்நடைகள் உலா வரும்போது பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் சாலையில் பயணிக்கும் பாதசாரிகள் என பலர் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உலாவும் கால்நடைகளின் உரிமையாளருக்கு உரிய அபராதம் விதித்து, எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.