*தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் பார்வையிட்டார்
குன்னூர் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இதுவரை செய்த சாதனைகளை குன்னூரில் செய்தி-மக்கள் தொடர்பு வாகனத்தில் திரையிடப்பட்டது. இதை பொதுமக்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் பார்வையிட்டார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏழை-எளிய மக்களின் குறைகளை தீர்க்க கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தொகுதி வாரியாக சென்று மக்களிடம் மனுக்களை பெற்றார்.
அந்த வகையில் அவரிடம் சுமார் 1 கோடி 5 ஆயிரம் பேர் மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைகளுக்கு தீர்வு காண ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இந்த துறையின் மூலம் கடந்த மாதம் வரை 1 கோடியே ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
இதையடுத்து அரசு திட்டங்களுக்கு விண்ணப்பித்து இருந்தால் அதன் பலன்களை உடனடியாக பொதுமக்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி முதல் கட்டமாக 2,058 முகாம்கள் நடத்தப்பட்டு 9 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.
2வது கட்டமாக கிராம பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை 2,344 முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 13 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், 95 சதவீதம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
3வது கட்டமாக தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்காக கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 433 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1 லட்சத்து 80 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1 லட்சத்து 47 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இந்த நிலையில் மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் முதல்வரின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை வாகனத்தில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது.
அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் இதனை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் பொதுமக்களிடம் இணைந்து திரைப்படத்தை பார்வையிட்டு, முதல்வரின் சாதனைகளை விளக்கி பேசினார்.