*கிராம மக்கள் மகிழ்ச்சி
குன்னூர் : குன்னூர் அருகே கரிமரா பகுதியில் அரசு பேருந்து சேவை மீண்டும் துவங்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமப்புற பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இருப்பினும் ஒரு சில கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் சென்று வர முடியாத சூழலில் மினி பேருந்துகள் சென்று பயணிகளின் சிரமத்தை குறைத்து வருகிறது. இந்த நிலையில் குன்னூரில் இருந்து கரிமரா கிராமத்திற்கு தினந்தோறும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து மூலம் பள்ளி மாணவ, மாணவிகள், தோட்ட தொழிலாளர்கள் உட்பட பல்வேறு பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் இந்த பேருந்தை நம்பி பயணம் செய்து வந்தனர். ஆனால் கொரோனா காலகட்டத்தில் இருந்து அந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
குறிப்பாக இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் தினமும் 3 கிலோமீட்டர் வரை நடந்து சென்று மோர்ஸ் கார்டன் பகுதிக்கு சென்றுதான் பேருந்து மூலம் குன்னூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அந்த 3 கிலோமீட்டரும் தேயிலை தோட்டங்களை கடந்து செல்வதற்குள் காட்டுமாடு, சிறுத்தை, கரடி என பல்வேறு வனவிலங்குகளுக்கு மத்தியில் அச்சத்துடன் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் அவசர தேவைகளுக்கு ஆட்டோக்களில் பயணம் மேற்கொள்ளலாம் என்றாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் ரூ.300 வரை கொடுத்தால் தான் கரிமரா செல்ல முடியும் என்கின்றனர்.
எனவே கரிமரா, கரோலினா, பெரியார் நகர், சந்திராகாலனி போன்ற பகுதிகளில் வசிக்குப் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அந்த வழித்தடத்தில் தனி பேருந்து அமல்படுத்தாத பட்சத்தில் முறையான பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றும், காலை, மதியம், மாலை, இரவு என்று நான்கு நேரமும் பேருந்து சேவை கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இது குறித்து கடந்த 16ம் தேதி தினகரன் நாளிதழிலில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.
இந்த செய்தியின் எதிரொலியாக அப்பகுதியில் தற்போது அரசு பேருந்து இயக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.