ஊட்டி : குன்னூர் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மார்கரெட் அமலா தலைமை வகித்தார். குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை துவக்கி வைத்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மனோகரன், நுகர்வு கலாச்சார வலையில் இன்று சிக்குண்டு மக்கள் அனுபவிக்கும் அவலங்களை விளக்கி பேசியதாவது:கடன், வரதட்சணை, லஞ்சம், சமுதாய ஏற்றத்தாழ்வுகள், சமூக தீமைகள் மலிந்து மனிதர்கள் நிம்மதி இழந்து வருகின்றனர்.
அழகி போட்டிகள் நடத்தி மகளிரிடையே அழகு உணர்வு என்ற பெயரில் தாழ்வு மனப்பான்மையைத் தூண்டி விட்டதன் விளைவாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பியூட்டி பார்லர் உள்ளது. தெருவுக்கு ஒரு அழகூட்டும் நிலையம் அமைந்துள்ளது.
சந்தையில் ஆயிரக்கணக்கான அழகுசாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. நிறமேற்ற, அழகூட்ட, மணமூட்ட பயன்படுத்தப்படும் பொருள்களில் 12,500 ரசாயனங்கள் கலந்துள்ளன. நகப்பூச்சில் உள்ள 65 சதவீத காரீயம் குழந்தைகளின் மூளைத் திறனை பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 22 சதவீத அழகூட்டி புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் உள்ளதாக ஸ்கின்டீப் அமைப்பு எச்சரிக்கிறது.
பெண் குழந்தைகள் விரைவில் வயதுக்கு வருவது,மார்பக புற்றுநோய் அதிகரிப்பது ஆகியவற்றுக்கு காரணம் அழகூட்டி ஹார்மோன்கள் என்பதற்கான முகாந்திரம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எனவே பள்ளியில் படிக்கும் இளவயது பெண் குழந்தைகள் அழகுசாதனம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களால் ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.இதில் செயலாளர் ஆல்துரை 2019ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் சிறப்புகளைப் பற்றி பேசினார். துணைத்தலைவர் சுப்பிரமணியன் மின்சார சிக்கனம் குறித்து பேசினார். முடிவில் ஆசிரியர் மரியா நன்றி கூறினார்.