Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

‘ரீகன்’ விளம்பரத்தால் வெடித்த சர்ச்சை; கனடா இறக்குமதிக்கு 10% கூடுதல் வரி: டிரம்ப் அதிரடி நடவடிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் புகைப்படம் மற்றும் குரலைப் பயன்படுத்திய விளம்பரத்தால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கனடா இறக்குமதிப் பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசு, வரிவிதிப்புகளுக்கு எதிராக ஒரு விளம்பரப் பிரசாரத்தை முன்னெடுத்தது. அதில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன், 1987ம் ஆண்டு வர்த்தகத் தடைகளுக்கு எதிராகப் பேசிய வானொலி உரையின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டது. இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிபர் டிரம்ப், தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘இதுவொரு மோசடி மற்றும் விரோதச் செயல்’ என்று கடுமையாக விமர்சித்தார். மேலும், அனுமதியின்றி ரீகனின் குரலைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியதாக ரீகன் அறக்கட்டளையும் கண்டனம் தெரிவித்தது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் முடித்துக் கொள்வதாக கடந்த 24ம் தேதி டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில், நேற்று டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ‘உலக சீரிஸ் போட்டியின்போது கூட அந்த விளம்பரம் உடனடியாக நீக்கப்படாததால், கனடா தற்போது செலுத்தி வரும் வரிகளுக்கு மேலாக, கூடுதலாக 10% வரி விதிக்கப்படுகிறது’ என்று கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு, வரும் திங்கட்கிழமை முதல் (அக். 27) அந்த விளம்பரப் பிரசாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே கனடாவின் உலோகங்களுக்கு 50% மற்றும் வாகனங்களுக்கு 25% என சில குறிப்பிட்ட துறைகளில் வரிகள் உள்ள நிலையில், தற்போது இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.