சென்னை: ஆதவ் அர்ஜுனா மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சையாக பதிவிட்டு அதை நீக்கினார். நேபாளம், இலங்கை போன்று புரட்சி ஏற்படுவதே ஒரே வழி என எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் உடனே அதை நீக்கினார். இந்நிலையில், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அரசியல் கட்சியினருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கூடிய மனு மீதான விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ஆதவ் அர்ஜுனாவின் பதிவு காண்பிக்கப்பட்டது இதனை பார்த்த நீதிபதி செந்தில்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் கவனித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், வன்முறையை தூண்டுவது போல ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளார். ஒரு சிறிய வார்த்தை பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும் நீங்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா என்றும், இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்றும் நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியதுடன். ஆதவ் அர்ஜுனாவின் சமூகவலைதள பதிவுக்கு பின்னால் உள்ள பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.