சென்னை மாநகராட்சி கட்டுபாட்டு மையம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு
சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மிகப்பெரிய எல்.ஈ.டி கண்காணிப்பு திரைகளில், கால்வாய்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கால்வாய்களில் நீர் தடையின்றி செல்வதையும், வெவ்வேறு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெறுகின்றதா என்று சுரங்கப்பாதைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் 1913 என்ற உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் புகார் குறித்த விவரங்களை தானே கேட்டறிந்தார். சமூக வளைதளங்களில் தெரிவிக்கப்பட்ட புகார்கள் குறித்து கணினியில் பார்வையிட்டு, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். கட்டளை மற்றும் கட்டுப்பாட்டிற்கு வருகின்ற புகார்கள் குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சம்மந்தப்பட்ட மண்டலங்களில் உள்ள அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புரசைவாக்கம் தானா தெரு, செல்லப்பா தெரு ஆகிய இடங்களில் மழைநீரை டிராக்டருடன் இணைக்கப்பட்ட அதிக சக்தி வாய்ந்த பம்புகள் மூலம் அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புரசைவாக்கம் ஓட்டேரி கால்வாயில் நீர் தடையின்றி வெளியேறி வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் எஸ்.எஸ். புரம் வெங்கட்டம்மாள் சமாதி சாலைபகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு மேற்கொண்டு, மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

