மரக்காணம்: தொடர் கனமழை ெபய்ததால் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமாக சுமார் 3,500 ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்யும் உப்பளங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வேதாரண்யம், தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் மரக்காணம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தொழிலை நம்பி சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள உப்பளங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு மேலாகும்.
ஆனால் அடுத்த சில வாரங்களில் வடகிழக்கு பருவ மழை துவங்குவதால் கனமழை பெய்யக்கூடும். இதனால் இந்த ஆண்டிற்கான உப்பு உற்பத்தி இந்த மாதத்துடன் முடியும் நிலையில் உள்ளது. தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்ததால் கோடைகாலத்தில்கூட உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்ததாக கூறுகின்றனர். இதனால் பருவ மழை காலத்தில் உப்பின் விலை பல மடங்கு அதிகரிக்க கூடும் என உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களும் போதிய வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். எனவே அரசு சார்பில் வழங்கப்படும் மழைக்கால நிவாரண உதவித்தொகையை அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உப்பள தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.