Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொடர் மழை காரணமாக மக்களுக்கு அச்சுறுத்தல்: தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் 3 வகை நோய்: புளூ தடுப்பூசி செலுத்துவது நல்லது

சென்னை: டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழைக்கால நோய்களை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, ஓரிடத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக அங்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. புயல் காலத்திலும், அதற்கு பிறகும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை அனுப்பியுள்ளது.

அதில், மாநிலத்தில் உள்ள அனைத்து மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருத்தல் அவசியம். ஆரம்ப சுகாதார நிலையங்களை பொறுத்தவரை செவிலியர்கள் தொடர்ந்து பணியில் இருத்தல் வேண்டும். மாலை 4 மணி முதல் காலை 9 மணி வரையில் தேவையின் அடிப்படையில் மருத்துவர்களை தொடர்பு கொண்டு பணிக்கு வருமாறு அழைக்கலாம்.

அதேபோன்று மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்பநர்கள், மருத்துவ உதவியாளர்களும் போதிய எண்ணிக்கையில் இருக்க வேண்டும். சுகாதார நிலையங்களில் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகள், வலுவற்ற மேற்கூரைகள், சாயும் நிலையில் மரங்கள் இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும். மழைநீர் வடிகால் வசதிகள், மாற்று மின் இணைப்பு வசதிகள், உரிய மின் விளக்கு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜெனரேட்டர் சாதனங்களை பழுதின்றி பராமரித்தல் வேண்டும். குடிநீரில் கழிவுநீர் கலக்கிறதா என்பதை ஆய்வு செய்வதும், போதிய அளவு குளோரின் கலந்து குடிநீர் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதும் முக்கியம்.

வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் உள்நோயாளிகளையும், பேறு காலம் நெருங்கும் கர்ப்பிணிகளையும் உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்புகள் பரவுகின்றனவா என்பதை கண்காணித்தல் அவசியம். அதேபோன்று, ஓரிடத்தில் மூன்று பேருக்கும் அதிகமானோருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் அங்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.

கொசு ஒழிப்புப் பணிகள், தடையற்ற மின்சாரம், மழைநீர் வடிகால் நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகளுடனும், சம்பந்தப்பட்ட துறைகளுடனும் சுகாதாரத் துறை இணைந்து செயல்படுதல் அவசியம் என சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மழை காலத்தில் 3 வகையான நோய் பாதிப்பு ஏற்படும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, காவேரி மருத்துவமனை மருத்துவர் சவுமியா ஸ்ரீதரன் கூறியதாவது: இந்த மழைக்காலத்தில் மூன்று வகையான நோய் பாதிப்புகள் ஏற்படும், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கொசு மூலமாக, தண்ணீர் மூலமாக மற்றும் மூச்சு குழாய் பாதிப்பு என மூன்று வகையில் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கொசு மூலம் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். எனவே மழை நின்றவுடன் வீட்டில் சுற்றி ேதங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். அதுமட்டுமின்றி மழை நீர் ஆங்காங்கே தேங்கி இருக்கும். அதையும் அகற்ற வேண்டும். தண்ணீர் மற்றும் உணவு மூலம் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக இந்த காலகட்டத்தில் வயிற்றுப்போக்கு அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் சுடு தண்ணீரை மக்கள் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக, கேன் தண்ணீர் தற்போது அதிக பயன்பாட்டில் உள்ளது. ஒரு கேனில் தண்ணீர் முடிந்து மறுமுறை தண்ணீர் புடிக்கும் பொழுது பாதுகாப்பான முறையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகு பயன்படுத்த வேண்டும். வேகாத ரா புட் (Raw food) எடுப்பது தவிர்க்க வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சேலட், பானி பூரி, சாட் உணவை உள்ளிட்டவை பாதுகாப்பான முறையில் உட்கொள்ள வேண்டும். அதனை சாப்பிடாமல் இருப்பது இன்னும் நல்லது.

அடுத்ததாக மூச்சு குழாயில் ஏற்படும் ஆபத்து. குறிப்பாக ஈர காற்று மற்றும் மழை தொடர்ந்து பெய்வதால் இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமாகிறது. ப்ளூ தடுப்பூசி ஆறு வயது முதல் பெரியவர்கள் வரை செலுத்திக்கொள்வது நல்லதாகும். அதுமட்டுமின்றி நீரிழிவு நோய் உள்ளிட்ட இணைநோய் உள்ளவர்கள் நிமோனியா தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லதாகும். தற்போது மழைக்காலம் தொடர்ந்து இருப்பதால் காய்ச்சல் பாதிப்பும் சற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாக மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால் பயப்படும் அளவிற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை

மழையில் நனைந்த ஆடைகளை உடனடியாக மாற்ற வேண்டும். ஈரமான ஆடைகள் உடல்நிலையை குறைத்து சளியை ஏற்படுத்தலாம். சூப், கஞ்சி, சூடான பானங்கள் குடிப்பது உடலை வெதுவெதுப்பாக வைத்திருக்க உதவும். கொசு கடி மூலம் பரவும் நோய்களை தவிர்க்க, கொசு வலை மற்றும் பூச்சி விரட்டி பயன்படுத்த வேண்டும்.

* முகக்கவசம் அவசியம்

மழை காரணமாக, காய்ச்சல், சளி, தொண்டை வலி பாதிப்பால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களுக்கு செல்லும்போது முதியோர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

* தடுக்க எடுக்க வேண்டியவை...

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளவும். தினமும் 7-8 மணி நேரம் தூங்குவது உடலின் இயற்கையான எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். குடிநீரை நன்கு கொதிக்க வைத்து அல்லது வடிகட்டி பயன்படுத்த வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி உண்ண வேண்டும். தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும், இது கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும். காய்ச்சல் அல்லது சளி அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சுயமாக மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். தினமும் லேசான உடற்பயிற்சி அல்லது யோகா செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.