தொடர் கனமழை, மேகவெடிப்பு, திடீர் வெள்ளப்பெருக்கு என மக்கள் பாதிப்பு; இமாச்சலப்பிரதேசத்தில் உயிரிழப்பு 276 ஆனது
சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி தொடங்கிய பருவமழை, வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கனமழை, மேகவெடிப்பு, திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற தொடர்ச்சியான இயற்கை சீற்றங்களால் மாநிலம் முழுவதும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக மண்டி, காங்க்ரா, குலு, சிம்லா, சம்பா மற்றும் கின்னவுர் மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறுகையில், ‘கனமழை காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
366 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 929 பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 139 குடிநீர் விநியோக திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குலுவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-305 மற்றும் மண்டி தேசிய நெடுஞ்சாலை-154 ஆகியவை நிலச்சரிவு மற்றும் சாலை அரிப்பால் மூடப்பட்டன. மண்டி, குலு, காங்க்ரா, சிர்மௌர் மற்றும் சம்பா போன்ற மாவட்டங்களில் பல முக்கிய இணைப்பு சாலைகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குலு மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, 125 சாலைகள் மூடப்பட்டு, 281 மின் விநியோக மின்மாற்றிகள் சேதமடைந்து, 56 குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டியில் 174 சாலைகள் மூடப்பட்டு, 98 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டு, 60 குடிநீர் திட்டங்கள் தடைபட்டுள்ளன. லுக் பள்ளத்தாக்கு, மணிகரன், சைன்ஜ், ஜிபி, மாண்டி-ஜோகிந்தர்நகர் சாலை மற்றும் கின்னாரில் உள்ள தாங்கி-சரங் போன்ற பல பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து இடங்களிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இருப்பினும் தொடர் மழை மற்றும் புதிய நிலச்சரிவுகள் மீட்பு பணிகளுக்கு தடையாக உள்ளன’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்படக்கூடிய சாலைகளில் பொதுமக்கள் பயணிப்பதை தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பருவமழை தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், மேலும் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.