Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராஜஸ்தானில் தொடரும் மரணங்கள்; விடுதி அறையில் ‘நீட்’ மாணவர் கொலை?

ஜெய்ப்பூர்: இந்தியாவின் நீட் பயிற்சி மையங்களின் தலைநகரான கோட்டாவில், ஒடிசா மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சோக நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடும் கல்விச் சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம், ராஜஸ்தான் அரசுக்கும், கோட்டா காவல்துறைக்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்ததால் கோட்டா மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த மாணவி ஒருவர், நேற்று முன்தினம் (அக். 24) தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சோகம் அடங்குவதற்குள் மற்றொரு மாணவர் உயிரிழந்துள்ளார்.

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷன் குமார் பட்ரோ (24) என்ற மாணவர், கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் கடந்த நான்கு மாதங்களாக நீட் தேர்விற்காகப் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ள விடுதியின் நான்காவது மாடியில் உள்ள தனது அறையில், நேற்று (அக். 25) மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்துள்ளார். கட்டிலில் படுத்திருந்த நிலையில், அவரது வாயில் இருந்து நுரை வெளியேறி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. அவரது மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.