Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடரும் விதிமீறல்

ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு குடைச்சல் தருவதை ஒன்றிய பாஜ அரசு தொடர் வழக்கமாக கொண்டுள்ளது. பேரவை விதிகளின்படி, மாநில பட்டியலில் இடம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூடி, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்பதே மரபு. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தன் அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வந்தார்.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘‘தன்னிச்சையான அதிகாரம் என்ற கருத்துக்கு அரசியலமைப்பில் இடமில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர் நேர்மையுடன் செயல்படவில்லை. மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நாளிலேயே, ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.

மசோதாக்களை நிறுத்தி வைப்பது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புவது என்பது, மாநில அரசின் முடிவுக்கு முரணானதாக இருந்தால், ஆளுநர் அதுகுறித்து அதிகபட்சம் 3 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தது. மேலும், இவ்வழக்கில் ஆளுநர் தரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.

இதேபோன்று கேரள அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும் என்றும் கூறியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் மசோதாக்களை நிறுத்தி வைக்கும் தனது ‘வழக்கமான பணியை’ தொடங்கி விட்டார் ஆளுநர்.

கடந்த ஏப். 28ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், ‘‘அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நலனுக்காக, கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்’’ என்ற சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மசோதா நிறைவேறிய 3 மாதங்களுக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தந்திருக்க வேண்டும். ஆனால், இம்முறையும் இழுத்தடிப்பு தொடர்கிறது.

மசோதா ஒப்புதல் தொடர்பாக, ஆளுநரை சந்திப்பதற்கும் உரிய அனுமதி வழங்கவில்லை. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கடந்த 2024-25ம் கல்வியாண்டுக்கான கல்வி நிதி ரூ.2,151 கோடியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்கவில்லை.

இருப்பினும், மாநில அரசு மாணவர்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை தடையின்றி செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் மாணவர்களின் நலனுக்காக தொடங்கப்பட உள்ள பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைப்பது முற்றிலும் முரணானது. இது மாணவர்களின் கல்வி விஷயத்தில் ஒன்றிய அரசின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவாகவும் உள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.