சென்னை: இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்த நீதிமன்ற உத்தரவை மீறியதாக குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்ர்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. படத்தில், இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதால் 5 கோடி இழப்பீடு கோரி இளையராஜா சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் குட் பேட் அக்லி திரைப்படத்தில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இடைக்கால தடை உத்தரவை மீறி, இளையராஜா பாடல்களை சம்பந்தப்பட்ட படத்தில் தொடந்து பயன்படுத்தி வருவதாகவும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறி இளையராஜா தரப்பில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.