தலைமை நீதிபதியை நோக்கி காலணி வீச முயன்ற வக்கீல் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம்
புதுடெல்லி: தலைமை நீதிபதியை நோக்கி காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடங்க அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணியின் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் (71) என்பவர் காலணி வீச முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காலணி வீச முயன்ற போது ராகேஷ் கிஷோர், சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என கூச்சலிட்டார். இந்த சம்பவத்தை நாடு முழுவதும் பலரும் கண்டித்த நிலையில், தனது செயலால் எந்த வருத்தமும் இல்லை என ராகேஷ் கிஷோர் கூறி உள்ளார்.
இந்நிலையில், தலைமை நீதிபதியை நோக்கி காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடங்க ஒப்புதல் கோரி ஒன்றிய அரசின் மூத்த நீதிபதியான அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணிக்கு வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், ‘‘நீதிமன்ற அறைக்குள் கோஷம் எழுப்பியது நீதி நிர்வாகத்தில் பெரும் தலையீடு, உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தை சிதைக்க வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி. மேலும், குற்றவாளி தனது செயலுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்காதது, நீதிமன்றத்தை அவமதிக்கவும், நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கவும் வேண்டுமென்ற நோக்கத்தை பிரதிபலிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தை போல் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடங்க அட்டர்னி ஜெனரலின் ஒப்புதலை பெற வேண்டியது முக்கியம்.