Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: தலைமை நீதிபதிக்கு ஐகோர்ட் கிளை பரிந்துரை

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதிரீதியாக நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அனுப்பியிருந்தார். இந்தப் புகார், வழக்கறிஞர்கள் வாட்ஸ்அப் குழுவில் வெளியானது. இதனிடையே, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜரான ஒரு வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் முன் கடந்த 25ம் தேதி வந்தது. அப்போது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நீதிபதிகள் உத்தரவின்படி நேரில் ஆஜரானார். அப்ேபாது அவரிடம், ‘‘இரு நீதிபதிகளில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) சாதி பாகுபாடுடன் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளீர்கள். அதே நிலைப்பாட்டில் தான் தற்போதும் இருக்கிறீர்களா?’’ என்றனர். அப்போது வாஞ்சிநாதன், ‘‘பட்டியலிடப்பட்ட அந்த வழக்கில் இருந்து விலகி விட்டேன். எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பித்தால் பதில் அளிக்கிறேன்’’ என்றார்.

இதையடுத்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வாஞ்சிநாதன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கஉத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓய்வு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தினர். இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாஞ்சிநாதன் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி சுவாமிநாதன், ‘‘என் மீதான சாதிரீதியான குற்றச்சாட்டில் அதே நிலையில் இப்போதும் இருக்கிறீர்களா’’ என்றார். இதற்கு வாஞ்சிநாதன், ‘‘நான் எங்கே, எப்போது, பேசினேன் என எழுத்துப்பூர்வ உத்தரவு வழங்கினால் பதிலளிக்கிறேன்’’ என்றார்.

இதையடுத்து, பல்கலைக்கழக வேந்தருக்கான அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நடத்திய விசாரணையை வாஞ்சிநாதன் விமர்சனம் செய்து பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. ‘‘இதில் நீதித் துறையை கடுமையாக விமர்சனம் செய்து கருத்து தெரிவித்துள்ளீர்கள். அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?’’ என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேட்டார். அதற்கு வாஞ்சிநாதன், ‘‘நீங்கள் ஏற்கனவே கேட்டதற்கு பதில் அளித்துள்ளேன். இப்போது நீங்கள் ஒரு வீடியோவை ஒளிபரப்பி, அது குறித்து கேட்கிறீர்கள். வீடியோவில் எப்படி வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம். வீடியோவை ஒளிபரப்பி, அதற்கு விளக்கம் கேட்பது முறையல்ல. கேட்பது வழக்குக்கு சம்பந்தம் இல்லாதது. வீடியோ தலைப்புக்கு நான் பொறுப்பல்ல. எழுத்துப்பூர்வமாக கேட்டால் பதில் அளிக்கிறேன்.

மேலும், உங்கள் மீது நான் தெரிவித்த புகாரை நீங்களே விசாரிக்க முடியாது’’ என்றார். அதற்கு நீதிபதி, ‘‘உங்கள் மீது இதுவரை எந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் வைத்த குற்றச்சாட்டில் தற்போதும் அதே நிலையில் தான் இருக்கிறீர்களா என விளக்கம் கேட்கத்தான் அழைத்தோம். அதுவும் மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர் ஒருவரின் வழக்கறிஞராக நீங்கள் இருந்ததால் உங்களை அழைத்தோம். அதற்குள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்ததாக நீங்களும், உங்கள் பின்னால் இருப்பவர்களும் பேசி வருகிறீர்கள். நீங்கள் என்னுடைய தீர்ப்பினை விமர்சிப்பதற்கு நூறு சதவீதம் உரிமை உள்ளது. அதற்கு நானே ஆதரவு தெரிவிக்கிறேன். ஆனால், சாதி பாகுபாட்டுடன் தீர்ப்பளிப்பதாக குற்றம் சாட்டுவது என்பது வித்தியாசமானது. அதை என்னால் ஏற்க முடியாது. நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

இதை உங்களுடன் இருக்கும் வழக்கறிஞர்களிடமும், ஓய்வு பெற்ற நீதிபதிகளிடமும் கூறுங்கள். எனது நீதித்துறை செயல்பாட்டில் யாரும் தலையிட முடியாது. உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் அளித்திருக்கும் புகாருக்கும், இங்கு நடைபெறும் விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தொடர்ந்து 4 ஆண்டுகளாக நீதித்துறையை, நீதிபதிகளை விமர்சனம் செய்து வருகிறீர்கள்? அதற்கு ஆதாரமாக குறைந்தபட்சம் 50 வீடியோக்களை காட்ட முடியும். சமூக வலைத்தளங்களில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சாதிரீதியாக நடந்து கொள்கிறார் எனக் கூறியுள்ளீர்கள். அது உண்மை என்றால் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?’’ எனக் கேட்டார். அதற்கு வாஞ்சிநாதன், ‘‘எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டால், பதிலளிக்க தயார்’’ என்றார். பின்னர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘வாய்மொழியாக பதில் அளித்தால் போதும்.

பதிலளிக்க தயங்குவது ஏன்? உங்களை நீதிமன்றத்தில் கோழை என கூறியதற்கு நான் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது மீண்டும் கூறுகிறேன். நீங்கள் ஒரு கோழை. உங்களை எல்லாம் போராளி என யார் கூறியது? நீங்கள் காமெடி பீஸ். சமூக ஊடகங்களில் பேசியது குறித்து தான் கேட்கிறேன். உச்சநீதிமன்ற நீதிபதிக்கு புகார் அளித்தது குறித்து எனக்கு தெரியாது. அது குறித்து நான் எதுவும் கேட்கவில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தமிழக பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சித்தும், பொது ஊடகங்களில் நீதித்துறையை விமர்சித்தும் பேசியுள்ளார். நேரில் ஆஜராக உத்தரவிட்டபடி அவர் ஆஜரானார். அப்போது அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்படவில்லை.

அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கப்படாத நிலையில், இதில் தலைமை நீதிபதி தலையிட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் கோரியது துரதிஷ்டவசமானது. இன்றும் வாஞ்சிநாதன் உரிய பதில் அளிக்கவில்லை. அவரின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு என கருதுகிறோம். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைக்கிறோம்’’ என உத்தரவிட்டனர்.

உங்களை நீதிமன்றத்தில் கோழை என கூறியதற்கு நான் வருத்தப்பட்டேன். ஆனால் இப்போது மீண்டும் கூறுகிறேன். நீங்கள் ஒரு கோழை. உங்களை எல்லாம் போராளி என யார் கூறியது? நீங்கள் காமெடி பீஸ்.