கேட்டதை தராவிட்டால் கன்டெய்னர்கள் முடக்கம்: சென்னை துறைமுக சுங்க அதிகாரிகளின் பண வேட்டை; ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்துவதாக நிறுவனம் அறிவிப்பு
* ஊழலை ஒழிக்க ஒன்றிய அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு
பண்டைக் காலம் முதலே கடல் வாணிபத்தில் பெயர் பெற்றது இந்தியா. 11,098 கி.மீ கடற்கரையை கொண்ட இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன. கடந்த மார்ச் மாத புள்ளி விவரத்தின்படி நாட்டின் மொத்த ஏற்றுமதி ரூ.6,47,768 கோடியாகவும், இறக்குமதி ரூ.6,79,624 கோடியாகவும் உள்ளது. கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி (ரூ.72,24,184 கோடி) 5.5 சதவீதமும், இறக்குமதி (ரூ.80,53,672 கோடி) 6.85 சதவீதமும் உயர்ந்துள்ளது. சென்னை துறைமுகத்தை பொறுத்தவரை பெட்ரோலிய பொருட்கள், வாகனங்கள்,சமையல் எண்ணெய், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், கருவிகள், ஸ்டீல், இரும்பு பொருட்கள் இறக்குமதியாகின்றன.
ஆட்டோமொபைல், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், டெக்ஸ்டைல், காலணி, தோல் பொருட்கள், இன்ஜினியரிங் பொருட்கள், கிரானைட், உணவு தானியங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் இந்த துறைமுகம் 54.96 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதுபோல் 1,818,017 20 அடி கன்டெய்னர்கள் கையாளப்பட்டுள்ளன. ஏற்றுமதியை பொறுத்தவரை சிறந்த பங்களிப்பு இந்தியாவுக்கு உண்டு. ஆனால், டிரம்ப் வரி விதிப்பால் 55 சதவீத இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஒன்றிய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சமீபத்தில் கூறியிருந்தார்.
இப்படி, வெளிப்புறக் காரணிகள் ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கு அவ்வப்போது பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு.இந்த நிலையில் துறைமுக அதிகாரிகளின் நெருக்கடிகள் போன்றவையும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது, அதிர்ச்சிக்குரிய விஷயமாகி வருகிறது. இந்த வகையில், சென்னையைச் சேர்ந்த விண்டிராக் என்ற நிறுவனம், அதிகாரிகளின் ஊழல்களால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தை நிறுத்துவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிறுவனம் வெளியிட்ட வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து வித ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தை எங்கள் நிறுவனம் முழுமையாக நிறுத்திக் கொள்கிறது. கடந்த 45 நாட்களாக சென்னை சுங்க அதிகாரிகளால் ஏற்பட்ட துன்புறுத்தல்கள் காரணமாக, இந்த இக்கட்டான முடிவை நாங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்திலேயே, லஞ்சம் தலைவிரித்தாடுவதை அம்பலப்படுத்தியிருந்தோம்.ஆனால், இதற்குப் பழிவாங்கும் வகையில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள், வணிகம் நடத்துவதற்கு இயலாத அளவுக்கு எங்களை பாதித்துள்ளது.
நெருக்கடிகளை சமாளிக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் எங்களால் தொடர்ந்து வணிகள் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எங்களது சவால் நிறைந்த பயணத்தில் இது நாள் வரை ஆதரவு நல்கிய பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வின்டிராக் நிறுவனர் பரவீன் கணேசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மும்பையில் தனது மனைவி பெயரில் உள்ள நிறுவனத்திற்கு வந்த சரக்குகளை எடுக்க மதிப்பீட்டு அதிகாரிக்கு ரூ.50,000 லஞ்சம் தர வேண்டியிருந்தது, எனக் கூறியுள்ளார்.
மேலும், ஊழல் அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரூ.6,15,384 மதிப்பிலான பொருட்களுக்காக ரூ.2.1 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே,வின்டிராக் நிறுவனத்தின் பதிவை, ஆரின் கேபிடல் தலைவரும், இன்போசிஸ் முன்னாள் சிஎப்ஓவுமான மோகன்தாஸ் பை, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில், ‘இது கொஞ்சம் கூட ஏற்கத்தக்கதல்ல. துறைமுகங்களில் ஊழலை ஒழிக்க நீங்கள் தவறி விட்டீர்கள். ஊழலற்ற ஆட்சியைத் தருவதாக நீங்களும் (நிர்மலா சீதாராமன்) பிரதமரும் உறுதி அளித்திருந்தீர்கள். ஆனால், ஊழலை மட்டுமல்ல வரித் தீவிரவாதத்தையும் ஒழிக்கத் தவறி விட்டீர்கள்.
நீங்கள் சமர்ப்பித்த பட்ஜெட்டில் இடம் பெற்ற புள்ளி விவரங்களை ஒரு முறை பாருங்கள். வரி வசூல் தொடர்பான வழக்குகளில் ரூ.30 லட்சம் கோடி அளவுக்கு தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளது. ரூ.15 கோடி வரி மட்டுமே வசூலிக்கக் கூடியவை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் கோடியை வசூலிக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வேதனைக்குரிய புள்ளி விவரத்தை பாருங்கள் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திரமோடி, நிதியமைச்சகம் மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘இந்த சம்பவம் உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. ஊழல் அமைப்பு பரவலாக வியாபித்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் வணிகள் செய்வதற்கான விலைக்கு இணங்குகின்றன. நாடு வளரவும், செழிக்கவும் வேண்டுமென்றால் உண்மையில் இப்படி ஒரு நிலை இருக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு, போர் பதற்றம், சர்வதேச பொருளாதார நிலவரங்கள் போன்றவை ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சுங்க அதிகாரிகள் மீதான மேற்கண்ட குற்றச்சாட்டுகள் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அதுமட்டுமின்றி, வெளிப்படையான நிர்வாகம் வழங்குவதாக கூறி வரும் ஒன்றிய அரசு மீதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
துறைமுக சுங்க அதிகாரிகள் மீதான மோசடி வழக்குகள் சில...
* 2025, செப்: மாலுமி ஒருவர் வெளியிட்ட சமூக வலைதள வீடியோ பதிவில், ‘இந்திய துறைமுகங்களை கடந்து செல்வதே வெறுப்பாக உள்ளது. கப்பல் துறைமுகத்துக்குள் நுழைந்ததுமே அதிகாரிகள் அதிலுள்ள உணவு, மதுபாட்டில்கள், சிகரெட் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். ஏழ்மையான நாடுகளில் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.
* 2025 ஜூன்: ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் ரூ.800 கோடி மோசடி நடந்தது தொடர்பாக, துறைமுக முன்னாள் அதிகாரி மற்றும் 3 தனியார் நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
* 2024 நவ: இரும்பு கழிவுகள் விற்பனையில் முறைகேடு தொடர்பாக சென்னை துறைமுக அதிகாரியின் வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியது.
* 2025 செப்: காட்டுப்பள்ளி துறைமுக கன்டெய்னர் முனையத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக கன்டெய்னர்கள் எடுக்க அனுமதித்ததாக ஹாங்காங் நிறுவனம் புகார் அளித்திருந்தது.
* 2025 பிப்: துபாயிலிருந்து சென்னை துறைமுகம் வழியாக ரூ. 2 கோடி மதிப்புடைய பச்சை பட்டாணியை இறக்குமதி செய்த விவகாரத்தில் 3 சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சை பட்டாணியை இறக்குமதி செய்ய அனுமதி உள்ள நிலையில், மைசூர் பருப்பு என போலி ஆவணம் சமர்ப்பித்து மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகின.
* விசாரணைக்கு நிதியமைச்சகம் உத்தரவு
சென்னை சுங்க துறை அதிகாரிகள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சுங்க அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வருவாய்த்துறை மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து ஆவணங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோல் ஒன்றிய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்ட எக்ஸ்தள பதிவில், உரிய ஆய்வு நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்துள்ளது.
* ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: விதி மீறல்களை குறிப்பிட்டு சுங்கத்துறை விளக்கம்
வின்டிராக் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். சுங்கத்துறை விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வின்டிராக் நிறுவனத்தின் உரிமையாளர் பிரவீன் கணேசன், ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வலைதளத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சுங்கத்துறை அதற்கான மறுப்பை வழங்கியதும் அந்தப் பதிவை நீக்கி விடுவார்.சுங்கப் பரிசோதனையின்போது ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகள் பின்வருமாறு:
* பரிசோதனையின் போது பொருட்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. அவை சரியான பிரிவில் வகைப்படுத்தப்பட்டு 01.09.2025 அன்று மறு வகைப்பாடு செய்யப்பட்டன. இதனை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
* 8 பெட்டிகளில் யுஎஸ்பி சார்ஜிங் கேபிள்கள் இருந்தன. அவை பேக்கேஜ் பட்டியல், பில், இன்வாய்ஸ் ஆகியவற்றில் குறிப்பிடப்படவில்லை. இது 1962 சுங்க வரிகள் சட்டம் பிரிவு 111ஐ மீறிய செயல்.
* இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் இருந்தன. பேட்டரி கழிவு மேலாண்மை விதிகள், 2022 பிரிவு 13 ன் படி, இவற்றுக்கு ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இபிஆர் (உற்பத்தியாளர் பொறுப்பேற்பு) பதிவு செய்வது கட்டாயம். கடந்த. 29.08.2025, 8.09.2025 மற்றும் 29.09.2025 நாட்களில் கேள்விகள் எழுப்பியும் இபிஆர் சான்றை நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை. மாறாக, இறக்குமதியாளர் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து, சட்டப்படி ஏற்க முடியாத கூற்றுக்களை முன்வைத்தார். அவற்றில் எதுவும் பேட்டரி கழிவு மேலாண்மை விதிகள், 2022ன் கீழ் இல்லை.
* சுங்க அதிகாரிகள் துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளும் தவறானவை. இறக்குமதியாளரிடம் 8.09.2025 அன்று தனிப்பட்ட விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்கப்பட்டது. தாமத கட்டணத்தை தவிர்க்க உதவும் வகையில் சுங்கச் சட்டத்தின் பிரிவு 49ன் கீழ் 11.09.2025ல் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இறக்குமதியாளர் கோரியபடி 19.09.2025 வரை கூடுதல் அவகாசமும் தரப்பட்டது. எந்த நிலையிலும் எந்த கட்டணமோ அல்லது லஞ்சமோ கோரப்படவில்லை .
* சுங்கத்துறை எழுப்பிய அனைத்து கேள்விகளும் பேட்டரி கழிவு மேலாண்மை விதிகள் 2022, பிஐஎஸ் சட்டம் 2016, சட்ட அளவியல் விதிகள் 2011 மற்றும் சுங்கச் சட்டம் 1962 ஆகியவற்றுடன் தொடர்புடையவை.
* மேற்கண்ட விவகாரங்கள் மீதான தீர்ப்பு நிலுவையில் இருந்தபோது அதே இறக்குமதியாளர் 12.09.2025 அன்று அவரது மனைவியின் நிறுவனம் மூலம் மேற்கண்ட வகையில் அதே மாதிரியான பொருட்கள் பட்டியலை சமர்ப்பித்தார். இது கவனக்குறைவு என்பதை விட, திட்டமிட்டு ஏமாற்றுவதை காட்டுகிறது.
* 30.09.2025 அன்று அவரிடம் உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இறக்குமதியாளர் சுங்க அதிகாரிகள் தீங்கு விளைவிப்பதாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி மூத்த அதிகாரிகளை மிரட்ட முயன்றார். இதுவும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
* இறக்குமதியாளரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கு முறையான விளக்கமும் விதி மீறல் தொடர்பான உண்மைகளையும் சுங்கத்துறை தெரிவித்த பிறகு அவற்றை நீக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் சரக்குகளை அனுமதிக்க இதன்மூலம் தந்திரமாக அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார்.
* சென்னை சுங்கத்துறை அதன் சட்டப்பூர்வ கடமைகளைச் செய்வதை தவறான குற்றச்சாட்டுகளால் தடுக்க முடியாது. இவ்வாறு சுங்கத்துறை வெளியிட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.