சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2017ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு ஒரேநாடு ஒரேவரி எனும் கொள்கைக்கு முரண்பாடாக 4 அடுக்கு வரியாக விதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மிகப்பெரும் சுமையாக மாறியிருப்பதை பேரமைப்பு தொடர்ந்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றதோடு, மாநில அரசும் உரிய அழுத்தம் தர வலியுறுத்தி வந்தது. பிரதமரின் அறிவிப்பின்படி வரி சீர்திருத்தம் மூலம், ஈரடுக்கு வரியாக மாற்றியது மகிழ்ச்சிக்குரியதே. ஆனாலும், இந்த வரி குறைப்பு பொதுமக்களையும், நுகர்வோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பேரமைப்பின் விருப்பமும், கோரிக்கையும் ஆகும்.
அதீத ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் அடித்தட்டு, நடுத்தர நுகர்வோர்கள் பயன்பெற முடியாத நிலைமையை கருத்தில் கொண்டு, பல பொருட்களுக்கு வரிச்சலுகை இப்போது ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரிச்சலுகையை பயன்படுத்தி, தயாரிப்பாளர்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகள், விற்பனை விலையை கூட்டி, ஒன்றிய அரசு அறிவித்துள்ள வரி குறைப்பு நுகர்வேரை சென்றடையாத நிலையை தயாரிப்பாளர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. இத்தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, வரிகுறைப்பு நுகர்வோரையும் பயனாளர்களையும் சென்றடையும் வகையில், அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்து, உரிய நடவடிக்கை எடுத்து நுகர்வோர் நலன் பாதுகாத்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.