திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பகுதியில், அறநிலையத்துறை சார்பில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதை எதிர்த்து, சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ரமேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர், அண்ணாமலையார் கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரத்தில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அண்ணாமலையார் கோயில் பகுதியில் நடைபெறும் கட்டுமானங்கள் தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர். அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர், அண்ணாமலையார் கோயில் பகுதியில் நேற்று நேரில் ஆய்வு நடத்தினர்.
ராஜகோபுரம் எதிரிலும், கோயில் நான்காம் பிரகாரத்திலும், அம்மணி அம்மன் கோபுரம் அருகே வட ஒத்தவாடை தெருவிலும் நடைபெறும் கட்டுமான பணிகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அதோடு, கட்டுமான பணிகள் தொடர்பான திட்ட அறிக்கையை பார்வையிட்டனர். மேலும், இதுபோன்ற கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து விசாரித்தனர்.