கட்டுமான பயன்பாட்டுக்கு வாங்கும் புதிய கனரக வாகனங்கள் பதிவுக்கு ஆயுட்கால வரி கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: கட்டுமான பயன்பாட்டிற்கான புதிய கன ரக வாகனத்தை பதிவு செய்வதற்கு ஆயுட்கால வரி செலுத்தும்படி சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்ட்டார போக்குவரத்து அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கோரி சேலத்தை சேர்ந்த வி.கே.எஸ்.எஸ். நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் நிறுவனம் தரப்பில், ஆயுட்கால வரியை செலுத்துவதற்கு பதிலாக, ஆண்டுதோறும் வரியை செலுத்த தயாராக உள்ளோம்.
வருடாந்திர வரி செலுத்த வேண்டுமா அல்லது ஆயுட்கால வரி செலுத்த வேண்டுமா என்று வாகன உரிமையாளர் தேர்வுசெய்ய வாய்ப்புள்ள நிலையில், ஆயுட்கால வரியை செலுத்தும்படி ஆர்.டி.ஓ. கட்டாயப்படுத்த முடியாது என்று வாதிடப்பட்டது. போக்குவரத்துத் துறை தரப்பில், தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஹாஜா நஜிருதீன் ஆஜராகி, வாகனத்துக்கான தற்காலிக பதிவுக்கு மட்டுமே விருப்பங்களில் ஒன்றை தேர்வு செய்ய முடியும்.
ஆனால் மனுதாரர் புதிய வாகனத்துக்கான தற்காலிக பதிவு முடிந்து, அதன்பின்னர் நிரந்தர பதிவுக்காக விண்ணப்பம் செய்வதால் ஆயுட்கால வரி செலுத்துவது மட்டுமே ஒரே வழி என்று விளக்கம் அளித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட் நீதிபதி, மனுதாரர் பதிவுசெய்ய விரும்பும் புதிய வாகனத்திற்கு ஆயுட்கால வரியாக வாகனத்தின் மதிப்பில் 8 சதவிகித தொகையை ஆயுட்கால வரியாக செலுத்த வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டத்தின் பத்தாவது அட்டவணை குறிப்பிட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. வாகனத்தின் விலையில் 8 சதவிகிதத்தை ஆயுட்கால வரியாக செலுத்தி 4 வாரங்களுக்குள் வாகனத்தை பதிவுசெய்ய வேண்டும். அந்த நான்கு வாரங்களுக்கு மனுதாரர் நிறுவனத்தின் இந்த புதிய வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது என்று தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.