*முதல்வர் டிச.7ல் மக்களுக்கு அர்ப்பணிப்பு
மதுரை : மதுரை - தொண்டி சாலையில் நடைபெறும் மேலமடை மேம்பால கட்டுமான பணிகள் முடிவுற்றுள்ள நிலையில், இறுதிக்கட்ட அழகுபடுத்தும் பணிகள் நடக்கிறது.இதனை டிச.7ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெறும் விழாவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். இதேபோல் கோரிப்பாளையத்திலும் மேம்பால திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
தென் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள், மதுரை சுற்றுச்சாலை வழியாக நகருக்குள் நுழையும்போது மதுரை - தொண்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாகவும், நகரின் மைய பகுதியான கோரிப்பாளையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டும் வகையிலும் மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023, மே மாதம் அறிவித்தார்.
இதையடுத்து, மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையிலும், கோரிப்பாளையம் சந்திப்பிலும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கு 2023ம் ஆண்டு அக்.30ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டப்படி தொண்டி சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகம், ஆவின் மற்றும் அப்பல்லோ சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்களை அகற்றி ரவுண்டானாவுடன் கூடிய மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த மேம்பாலம் 30 தூண்களுடன் 1,100 மீட்டர் நீளம், 17.2 மீட்டர் அலகத்துடன் நான்கு வழிச்சாலையுடன் ரூ. 150.28 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.
இறுதிக்கட்டமாக மேம்பாலத்திற்கு வண்ணம் பூசுவது, மின் விளக்குகள் பொருத்துவது, அணுகுசாலை அமைப்பது, மேம்பாலத்தில் தார்சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதில், அணுகுசாலை பணிகள் சுமார், 800 மீட்டர் தூரத்திற்கு முடிந்துள்ள நிலையில், 200 மீட்டர் பணிகள் நடந்து வருகின்றன.
இதனுடன், மேம்பாலத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன்களில் செடிகள் நடுவது தொடர்பாக, மூன்று வடிவங்களில் வரைபடங்கள் நெடுஞ்சாலைத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கு, ஓரிரு நாட்களில் அனுமதி கிடைத்தபின், அந்த பணிகளும் முடிக்கப்படும் இதேபோல் மேம்பால பணிகளுடன் சேர்த்து, ஆவின் சந்திப்பு மற்றும் அண்ணா பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு விரிவாக்க பணிகளும் நடைபெற்று வருவதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பணிகள் டிச.1ம் தேதிக்குள் முடிக்கப்படும் என அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து திட்டமிட்டபடி டிச.7ம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் விழாவல் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலமடை மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.
இதனுடன், கோரிப்பாளையத்தில் ரூ.190.40 கோடியில் 61 தூண்கள் மற்றும் 62 கண்களுடன் மொத்தம், 2 கி.மீ நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், தமுக்கம் பகுதியில் துவங்கும் பாலத்தின் ஏறுதளம், கோரிப்பாளையம் சந்திப்பு மற்றும் வைகை ஆற்றில் புதிதாக கட்டப்படும் பாலம் வழியாக 1.3 கி.மீ நீளத்துடன் 12 மீட்டர் அகலத்தில் ஒரு திசை வழித்தட மேம்பாலமாக சென்று நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் இறங்கும் வகையில் கட்டப்படுகிறது. மேலும், கோரிப்பாளையம் சந்திப்பில் பாலத்தில் இருந்து செல்லூர் நோக்கி செல்ல கூடுதலாக 700 மீட்டர் நீளத்துக்கு இறங்கு தளம் 8.50 மீட்டர் அகலத்துடன் அமைகிறது.
மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பக்கவாட்டின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படுவதுடன், பாதசாரிகள் நடந்து செல்ல 1.50 மீட்டர் அகலமுள்ள நடைபாதையும் உருவாக்கப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்தமாக 7,000 மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் கட்டும் பணிகளும், பீபீ குளம் - காந்தி மியூசியம் சாலை சந்திப்பில் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்காக ஒரு அண்டர் பாஸ் வழியும் அமைய உள்ளது.
இதில், வைகை ஆற்றுக்குள் கட்டப்பட்டு வரும் ஒரு வழித்தட மேம்பாலத்திற்கான கட்டுமான பணிகள், 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. அடுத்ததாக, கோரிப்பாளையம் பிரதான சாலையில் அமையும் மேம்பாலத்திற்கான தூண்களை இணைக்கும் வகையில் மேல் பகுதியில் பீம்களை பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
மழைநீர் வடிகால் கட்டும் பணிகளை பொருத்தவரை, 3,000 மீட்டர் தூரத்திற்கு முடிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதான சாலையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒட்டுமொத்தமாக, திட்டத்தில் 80 சதவீதம் வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு திசையியிலும் கட்டுமான பணிகள் முடிவுக்கு வரும் போதும், அதன் அடிப்படையில் அரசிடம் அனுமதி பெற்று, அப்பகுதிக்கான மேம்பாலம் திறக்கப்படும் என்று, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


