*50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
தஞ்சாவூர் : ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் சதய விழா வரும் 31 மற்றும் நவம்பர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த விழா, ராஜராஜ சோழனின் பிறந்த நாளை (ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில்) கொண்டாடும் வகையில் இரண்டு நாட்கள் நடைபெறும். இந்த விழாவிற்காக, கோவில் வளாகத்தில் சிறப்பு பந்தல் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
உலகப்பிரசித்திப்பெற்ற தஞ்சை பெரியகோயில் உலக பாரம்பரிய சின்னமாகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். இதற்காக ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு 1040-வது சதய விழா வருகிற 31ம் தேதி, 1ம் தேதி ஆகிய நாட்களில் நடக்கிறது.விழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் தகர சீட்டுகள் கொண்டு பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக லாரிகள் மூலம் சவுக்கு கட்டைகள், தகர சீட்டுகள், ராட்சத ஏணிகள் ஆகியவை நேற்று முன்தினம் பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. பெருவுடையார் சன்னதி அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

