இந்திய அரசியலமைப்பு சட்ட நாளில் நல்வழிகளை பின்பற்றி, சமூகநீதி, அடிப்படை உரிமைகளை உறுதி செய்வோம்: அன்புமணி
சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்ட நாளில் அது காட்டும் நல்வழிகளை பின்பற்றி, சமூகநீதி, அடிப்படை உரிமைகளை உறுதி செய்வோம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "இந்தியாவில் அனைத்து அமைப்புகளையும் விட வலிமையானதும், உயர்ந்ததும் அரசியலமைப்பு சட்டம் தான். அண்ணல் அம்பேத்கரால் வகுக்கப்பட்டு, இந்திய அரசியல் சட்ட அவையால் 1949ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 76-ஆம் ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் எந்த நாட்டிற்கும் கிடைக்காத சிறப்பான அரசியலமைப்புச் சட்டம் நமக்கு கிடைத்திருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு நாம் செலுத்தும் மரியாதை என்னவென்றால், அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, அனைவருக்கும் சமூகநீதி வழங்கி, அடிப்படை உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வது தான். அதற்காக அறவழியிலும், அரசியல் வழியிலும் உழைப்போம்" என பதிவிட்டுள்ளார்.


