அரசியலமைப்பு தினத்தில் 18 வயது புதிய வாக்காளர்களுக்கு கவுரவம்: கல்வி நிலையங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
புதுடெல்லி: அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் தங்கள் கடமைகளை முதன்மையாகக் கருத வேண்டும் என்றும், புதிய வாக்காளர்களைக் கல்வி நிலையங்கள் சிறப்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, வாரணாசி தொகுதியில் உள்ள முதல்முறை வாக்காளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி கடிதம் எழுதி, அவர்கள் வாக்களிக்க ஊக்குவித்திருந்தார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து, தற்போது 2025ம் ஆண்டு அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி சிறப்புக் கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், ‘உரிமைகள் என்பவை நாம் ஆற்றும் கடமைகளிலிருந்தே பிறக்கின்றன’ என்ற மகாத்மா காந்தியின் கருத்தை நினைவுகூர்ந்துள்ள பிரதமர், குடிமக்கள் தங்கள் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ‘2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில், ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த வாக்களிக்கும் உரிமை மிக முக்கியமானது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 18 வயது நிரம்பி முதல்முறை வாக்காளர்களாக மாறும் மாணவர்களைப் பாராட்டி, அவர்களைக் கவுரவிக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்குப் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட அரசியலமைப்புச் சிற்பிகளுக்கு மரியாதை செலுத்தியுள்ள அவர், ‘அவர்களின் தொலைநோக்குச் சிந்தனை தேசத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது’ என்று தனது கடிதத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.


