2ம் கட்டமாக 122 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு; பீகாரில் பிரசாரம் ஓய்ந்தது: 14ம் தேதி தேர்தல் முடிவு அறிவிப்பு
பாட்னா: பீகாரில் 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள 122 தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. வரும் 14ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரில் 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதில், 121 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் 6ம் தேதி நடைபெற்றது. இதில், இதுவரை இல்லாத அளவுக்கு 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளுக்கான 2வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நாளை நடக்க உள்ளது.
இதற்கான சூறாவளி பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் நேற்றைய கடைசி நாள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கிஷன்கஞ்ச் மற்றும் புர்னியாவில் நடந்த பேரணிகளில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு நேற்று 35வது பிறந்தநாள்.
இதையொட்டி நேற்று ரோதஸ் மாவட்டத்தில் கராகட் தொகுதியில் பிரசாரம் செய்த அவருக்கு கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பிறந்தநாள் வாழ்த்துடன் வரவேற்றனர். மேடையிலேயே கேக் வெட்டி மக்களுடன் தனது பிறந்தநாளை தேஜஸ்வி கொண்டாடினார். அப்போது பேசிய தேஜஸ்வி யாதவ், ‘‘வரும் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு விரைவில் நாங்கள் ஆட்சி அமைப்போம். அப்போது உங்கள் அனைவருக்கும் எனது பதில் பரிசுகள் கிடைக்கும் என வாக்குறுதி தருகிறேன்’’ என்றார்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால், பீகாரில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு ேவலை, மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய கடைசி நாள் பிரசாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சசாரம், அர்வாலில் 2 பேரணிகளிலும், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவுரங்காபாத், சசாரம் மாவட்டங்களிலும், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் 4 இடங்களிலும் வாக்கு சேகரித்தனர்.
பீகார் தேர்தலையொட்டி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த தீவிர பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதைத் தொடர்ந்து 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் வரும் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
* ஊடுருவல்காரர்களை காப்பாற்ற முயற்சி அமித்ஷா குற்றச்சாட்டு
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றைய தனது பிரசாரத்தில், ‘‘ராகுலும், தேஜஸ்வி யாதவும் ஊடுருவல்காரர்களை காப்பாற்ற பீகாரில் யாத்திரை மேற்கொண்டனர். ராகுல் காந்தி பாட்னாவிலிருந்து இத்தாலி வரை எத்தனை யாத்திரைகளை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம், ஆனால் அவரால் ஊடுருவல்காரர்களைக் காப்பாற்ற முடியாது. நாட்டிலிருந்தும் பீகாரிலிருந்தும் ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் வெளியேற்ற நாங்கள் பாடுபடுவோம்.
பீகார் இளைஞர்களின் நலனை விட ஊடுருவல்காரர்களைப் பற்றி ராகுல் அதிக அக்கறை கொண்டுள்ளார். அயோத்தி ராமர் கோயில் போலவே, சீதாமர்ஹியில் சீதா மாதா கோயில் கட்டப்படும். அடுத்த இரண்டரை ஆண்டுகளில் இந்த பிரமாண்டமான கோயில் ரூ.850 கோடி செலவில் கட்டப்படும். பீகாரில் பாஜ கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயம் நாங்கள் இங்கு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தை கட்டமைப்போம்’’ என்றார்.
* மோடி, அமித் ஷா நிச்சயம் சிக்குவார்கள்
கிஷன்கஞ்சில் நடந்த பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘நாங்கள் கூறிய வாக்கு திருட்டு குற்றச்சாட்டு குறித்து மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்த பதிலும் இல்லை, ஏனெனில் உண்மை இப்போது மக்கள் முன் உள்ளது. பிரதமர் மோடியும் அமித்ஷாவும் அவர்கள் விரும்பும் இடத்திற்குச் செல்லலாம், ஆனால் இறுதியில் அவர்கள் வாக்கு திருட்டில் ஈடுபட்டதற்காக பிடிபடுவார்கள். மக்கள் ஒன்று கூடி வாக்கு திருட்டை நிறுத்தினால், இந்தியா கூட்டணி பீகாரில் 100 சதவீதம் அரசாங்கத்தை அமைக்கும். தேர்தல் நாளில், வாக்குச் சாவடிகளில் எச்சரிக்கையாக இருங்கள்.
பீகாரில் வாக்கு திருட்டைத் தடுப்பது இப்போது ஒவ்வொரு இளைஞர், தொழிலாளி மற்றும் விவசாயியின் கடமை’’ என்றார். புர்னியாவில் நடந்த பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘‘மோடியும் ஷாவும் மக்களின் குரலுக்கு பயப்படுகிறார்கள். பிரதமர் மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் தான் பீகாரில் மோசமான வேலைவாய்ப்பு நிலைக்கு காரணம். பீகார் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தர நிதிஷ்குமார் விரும்பவில்லை’’ என்றார்.
* ‘எதிரிகள் என்னை கொலை செய்யலாம்’
ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் சமீபத்தில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஜனசக்தி ஜனதா தளம் என புதிய கட்சியை தொடங்கி பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மஹுவா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எனது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனக்கும் அச்சுறுத்தல் உள்ளது. என் எதிரிகள் என்னை கொல்லக் கூட வாய்ப்புள்ளது’’ என்ற அவர் தனது தம்பியான தேஜஸ்வி யாதவ்வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
* முதல்கட்ட தேர்தலில் 121 இடங்களில் 72ல் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா பாட்னாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கடந்த 6ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 121 இடங்களில் 72 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். முதல் கட்டத்திலேயே காங்கிரஸ் இரட்டை இலக்கத்தை எட்டியிருக்கலாம். தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உள்ள அமைச்சர்கள் தங்கள் தோல்வியை உணர்ந்துள்ளனர்.
இதனால் குறைந்தபட்சம் ஒரு துணை முதல்வர் மற்றும் பல அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ வீடுகளை காலி செய்ய முடிவெடுத்து ஊழல் தொடர்பான ஆவணங்களை அழித்து வருகின்றனர். இந்த சமயத்தில் எந்த அரசு அலுவலகத்திலும் தீ விபத்து ஏற்பட்டால் அதிர்ச்சி அடைய வேண்டாம்’’ என கூறி உள்ளார்.
* ‘மாற்றத்தை உறுதி செய்வோம்’தேஜஸ்விக்கு ராகுல் வாழ்த்து
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு நேற்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘தேஜஸ்வி யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். பீகார் மக்களுக்கு மாற்றம், வேலைவாய்ப்பு, சமத்துவம், முன்னேற்றத்தை நாம் உறுதி செய்வோம்’’ என கூறி உள்ளார்.
* 8 தொகுதிகளில் இடைத்தேர்தல்
பீகாரில் 122 தொகுதிகளில் நாளை 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடப்பதோடு, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், தெலங்கானா, பஞ்சாப், மிசோரம், ஒடிசா ஆகிய 7 மாநிலங்களில் 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது.

