தொகுதி, ஓட்டுகள் முக்கியமில்லை வடகிழக்கு மாநிலங்களுக்கு 70 முறை பயணித்துள்ளேன்: அருணாச்சலில் பிரதமர் மோடி பேச்சு
இட்டாநகர்: ‘ஒரு மாநிலத்தில் எத்தனை தொகுதிகள் இருக்கின்றன, எத்தனை ஓட்டுகள் இருக்கின்றன என்பது முக்கியமில்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு 70 முறை பயணித்துள்ளேன்’ என அருணாச்சல பிரதேசத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசி உள்ளார். அருணாச்சல பிரதேசத்தில் ரூ.5,100 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இட்டா நகரில் உள்ள இந்திராகாந்தி பூங்காவில் நடைபெற்ற பேரணியில் நேற்று பேசியதாவது: கடினமான எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் கைவிடுவது காங்கிரசின் இயல்பான பழக்கம். இந்த பழக்கம் தான், அருணாச்சல பிரதேசத்தையும், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் பெரும் தீங்கு விளைவித்தது. ஆனால் ஒரு காலத்தில் சாலைகள் அமைப்பது சாத்தியமற்றதாக கருதப்பட்ட பகுதிகள் இப்போது நவீன நெடுஞ்சாலைகளை கொண்டுள்ளன. நினைத்துப் பார்க்க முடியாத சேலா சுரங்கப்பாதை இப்போது அருணாச்சலின் பெருமைமிக்க அடையாளமாக மாறி உள்ளது. ஹோலோங்கி விமான நிலையம் புதிய முனையத்தை கொண்டுள்ளது.
இதனால் டெல்லிக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது மாணவர்கள் மற்றும் சுற்றுலபா பயணிகளின் பயணத்தை எளிதாக்கி உள்ளது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பெரிய சந்தைகளுக்கு அனுப்பவும் உதவுகிறது. அருணாச்சலில் வெறும் 2 மக்களவை தொகுதிகள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. நான் பிரதமரான பிறகு, நாட்டை காங்கிரசின் மனநிலையிலிருந்து விடுவிக்க தீர்மானித்தேன். எந்தவொரு மாநிலத்திலும் அதன் வாக்குகள், தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமில்லை. முதலில் நாடு என்பதே எங்கள் கொள்கை. மக்களே கடவுள் என்பதே எங்கள் மந்திரம். யாரும் இதுவரை கவனிக்காதவர்களை வணங்குகிறேன்.
அதனால்தான் காங்கிரஸ் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட அருணாச்சலப் பிரதேசம் 2014 முதல் வளர்ச்சியின் முன்னுரிமை மையமாக மாறி உள்ளது. டெல்லியில் இருந்து கொண்டு வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது என்பதால், 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணித்துள்ளேன். கடந்த வாரம் கூட மிசோரம், மணிப்பூர், அசாமில் இருந்தேன். ஒன்றிய அமைச்சர்களை தொடர்ச்சியாக அனுப்பி வைத்தேன். சுமார் 800 முறை ஒன்றிய அமைச்சர்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு வருகை தந்துள்ளனர்.
அடுத்தடுத்த காங்கிரஸ் அரசுகளால் எல்லை கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு பலரும் இடம்பெயர்ந்த நிலையில் இப்போது துடிப்பான கிராமத்திட்டத்தின் மூலம் அருணாச்சலில் உள்ள 450க்கும் மேற்பட்ட எல்லை கிராமங்கள் சாலைகள், மின்சாரம், இணையம், சுற்றுலா வசதிகளை பெற்று புதிய சுற்றுலா மையங்களாக மாறி வருகின்றன. இன்று நாடு முழுவதும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்த்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழா தொடங்கி உள்ளது.
இது பண்டிகை காலத்தில் மக்களுக்கு இரட்டை போனசாக கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பு சமையலறை பட்ஜெட்டை குறைக்கும். பெண்களக்கு உதவும். எல்லா இடத்திலும் ஊழல் மலிந்து, அனைத்தின் விலையும் உயர்ந்த நிலையிலும் முந்தைய காங்கிரஸ் அரசு வரிகளை அதிகரித்து கொண்டே இருந்தது. மக்கள் மீது அதிக வரிச்சுமையை சுமத்தியது. ஆனால் நாங்கள் படிப்படியாக வரிகளை குறைத்து நிவாரணம் அளித்துள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
* திரிபுரீஸ்வரி கோயிலை திறந்து வைத்தார்
அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து திரிபுரா சென்ற பிரதமர் மோடி கோமதி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட திரிபுரீஸ்வரி கோயிலை திறந்து வைத்து அம்மனை வழிபட்டார். 500 ஆண்டுகள் பழமையான இக்கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்று. இக்கோயில் ரூ.52 கோடியில் புனரமைக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.