Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

202 தொகுதிகளில் அமோக வெற்றி; பீகார் புதிய முதல்வர் யார்? நிதிஷ்குமார் பெயரை அறிவிக்க பா.ஜ தயக்கம்

பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேஜ கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றும் புதிய முதல்வர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. நிதிஷ்குமார் பெயரை அறிவிக்க பா.ஜ தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில், நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றி, 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், பாஜ 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ‘ஜன் சுராஜ்’ கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் கணக்கைத் தொடங்கத் தவறியது. இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 202 இடங்களும், இந்தியா கூட்டணிக்கு 35 இடங்களும் கிடைத்துள்ளன.

இந்தத் தேர்தலில், பெண்களின் நலனுக்காக நிதிஷ் குமார் அரசு கொண்டு வந்த திட்டத்தின் கீழ் 1.20 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்ட தலா 10,000 ரூபாய் தான் வெற்றிக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து நிதிஷ் குமார் மீண்டும் 10வது முறையாக பீகார் முதல்வர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் புதிய அரசின் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் இதுபற்றிய முறையான அறிவிப்பு, புதிய முதல்வர் பெயர் எதுவும் இப்போது வரை தெரிவிக்கப்படவில்லை. ஏனெனில் மீண்டும் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் வசம் வழங்க பா.ஜ தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தான் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல மணி நேரம் கடந்தும் எந்த அறிவிப்பையும் பா.ஜ வெளியிடவில்லை.

தேர்தல் பிரசாரத்தில் கூட துணை முதல்வர் சாம்ராட் சவுத்திரியை ஆதரித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறும்போது, ‘சாம்ராட் சவுத்திரியை வெற்றி பெற வைத்தால் அவருக்கு மிகப்பெரிய பதவியை வழங்க பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்’ என்று கூறினார்.

இதன் மூலம் புதிய முதல்வர் பதவியை நிதிஷ்குமாருக்கு வழங்காமல் பா.ஜ தன்வசம் வைத்திருக்க விரும்புவதாகவும், இதுதொடர்பாக நிதிஷ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வானின் கட்சி 19 இடங்களை கைப்பற்றியுள்ளது. அவரது கட்சி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் நேற்று முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார்.

அதன்பின் சிராக் பாஸ்வான் கூறுகையில், ‘விரைவில் எம்எல்ஏக்கள் கூடி புதிய முதல்வரை தேர்வு செய்வார்கள். புதிய முதல்வர் மீண்டும் நிதிஷ்குமாராக இருக்க கூடுதல் வாய்ப்பு உள்ளது’ என்று மழுப்பலாக பதில் அளித்தார். முதல்வர் பதவி வழங்காமல் இருந்தால் நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் கடந்த 20 ஆண்டு கால ஆட்சியில், முதல்வர் பதவியை தக்கவைக்க அவர் அடிக்கடி இந்தியா கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தாவியிருக்கிறார்.

இந்த முறை நிதிஷ் கட்சி வெளியே சென்றாலும் பா.ஜ கூட்டணிக்கு 117 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்கள் மட்டுமே. இன்னும் 5 எம்எல்ஏக்கள் நிதிஷ் கட்சியை உடைத்தே பா.ஜ பெற்றுவிடும் என்ற தகவலும் வெளியாகி பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே மகாராஷ்டிரா போல் முதல்வர் பதவியை பா.ஜ வசம் ஒப்படைக்கலாமா என்பது குறித்தும் நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.