ஒவ்வொரு தொகுதியிலும் 60 ஆயிரம் பெண்களுக்கு ரூ.10,000 வழங்காவிட்டால் நிதிஷ் கட்சி 25 இடம் கூட வென்று இருக்காது: பிரசாந்த் கிஷோர் பரபரப்பு குற்றச்சாட்டு
பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு சற்று முன்பு ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 60,000க்கும் மேற்பட்ட பெண் பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 வழங்காவிட்டால், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் வெறும் 25 இடங்களுக்குள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டினார். பீகார் தேர்தலில் அவரது கட்சி ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. இந்த தோல்வி குறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில்,’ பீகார் தேர்தலில் எனது ஜன் சுராஜ் கட்சி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள நேர்மையான முயற்சியை மேற்கொண்டது.
ஆனால் தேர்தலில் ஒரு முத்திரையைப் பதிக்கத் தவறிவிட்டது. இந்தத் தோல்விக்கு நான் முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன். எங்கள் வேட்பாளர்கள் யாரும் சட்டமன்றத்திற்குச் செல்வதில்லை. மக்கள் மத்தியில் சென்று போராடுவதே எங்களுக்கு மக்களின் ஆணை. நாங்கள் தவறுகளைச் செய்திருக்கலாம், ஆனால் பிளவுபடுத்தும் அரசியல் செய்து அப்பாவி மக்களின் வாக்குகளை வாங்கும் குற்றத்தைச் செய்யவில்லை. வாக்கு திருட்டு என்பது இந்தியா முழுவதும் உள்ள ஒரு பிரச்சினை.
தேசிய எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் விவாதங்களை நடத்தி தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும். பீகார் தேர்தலில் எங்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் நாங்கள் தவறுகளைச் சரிசெய்து, நம்மை நாமே கட்டியெழுப்பி, வலுவாக மீண்டு வருவோம். எங்களுக்கு பின்வாங்கும் பழக்கம் இல்லை. ஆனால் நான் பீகாரைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டேன். நிதீஷ் குமார், பாஜ துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி போன்றோர் சாதி மற்றும் மத அடிப்படையில் மக்களைப் பிரித்து பணத்தைப் பயன்படுத்தி மக்களின் வாக்குகளை வாங்கிவிட்டார்கள்.
வாக்குகளைப் பெறாமல் இருப்பது குற்றமல்ல. ஆனால் குறைந்தபட்சம் நான் ஊழல் அல்லது பிளவுபடுத்தும் அரசியலில் ஈடுபடவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 60 ஆயிரம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வழங்கி வாக்குகளை பெற்றுவிட்டார்கள். இனி அவர்கள் வாக்குறுதி அடிப்படையில் தலா1.5 கோடி பெண்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கினால், நான் அரசியலை விட்டு நிச்சயமாக விலகி விடுவேன்.
நிதிஷ் குமாருக்கும் அவரது வெற்றிக்கும் இடையில், ஒரே ஒரு விஷயம் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ரூ.10,000க்கு 60,000 வாக்குகளை வாங்குவது. அது வாக்கு வாங்கலா அல்லது சுயதொழில் திட்டத்தின் ஒரு பகுதியாகவா என்பது தெளிவாக்கப்பட வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர்.
இப்போது பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் குமார் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணி அவர்களின் தோள்கள் மேல் வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்தெந்தப் பிரச்சினைகள் குறித்து வாக்களிக்க வேண்டும் என்பதை புரிய வைக்க முடியாததற்கு வருந்துகிறேன். இதற்காக நாளை மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வாவில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


