Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொகுதி கைவிட்டு போகும் தகவலை கேட்டு அதிர்ச்சியில் இருக்கும் மாஜி வேட்பாளர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தொகுதி கைவிட்டு போகிற தகவலை கேட்டு மிகுந்த அப்செட் மனநிலைக்கு போயிட்டாங்களாமே மாஜி இலைக்கட்சி வேட்பாளர்கள்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு மாவட்டத்தில் ஏற்கனவே இலைக்கட்சி தொடர் பின்னடைவை சந்தித்து வருது.. மூன்றாம் படை வீடு அமைந்துள்ள சட்டமன்ற ெதாகுதியில் கடந்த இரு தேர்தல்களிலும் போட்டியிட்ட இலைக்கட்சியினருக்கு தோல்வியே மிஞ்சியது.. எப்படியாவது இலைக்கட்சியில் சீட் வாங்கி இந்த முறை எம்எல்ஏ ஆகிவிடலாம் என்ற கனவில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியுற்ற இரு மாஜிக்கள், தீவிரமாக களத்தில் சுற்றி வருகின்றனராம்..

தலைநகருக்கும் அடிக்கடி சென்று கட்சியின் மேல்மட்ட தலைவர்களையும் சுற்றி சுற்றி வந்தாங்களாம்.. தொகுதிக்குள் கோயில் திருவிழா, முக்கிய நிகழ்ச்சிகள் நடப்பது தெரிந்தாலும், அழைப்பு விடுக்காவிட்டாலும் கூட ஆஜராகி விடுகின்றனராம்.. தொகுதி நிகழ்வில் யார் முன்னே போய் நிற்பது என்பதில், இருவரிடையேயும் மிகுந்த போட்டி நிலவுகிறதாம்.. இருவருக்கும் இடையே போட்டி பரபரப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், தொகுதியானது கூட்டணியில் மலராத கட்சிக்கு போக வாய்ப்புள்ளதாக மேலிடத்தில் இருந்து தகவல் கிடைக்க, இருவரும் மிகுந்த அப்செட் மன நிலைக்கு சென்றுவிட்டார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எப்படியும் ஆண்டு தொடக்கத்துல இடமாற்றம் இருக்கத்தான் போகுது, இப்ப வந்தாலும் ரெடிதான் என கலெக்சனில் ஈடுபடும் காக்கி அதிகாரிங்க கூலா சொல்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்ட காக்கி உயர் அதிகாரி ரொம்ப கறாராக இருந்தும், அவரு கண்ணில் மண்ணை தூவிட்டு இன்ஸ். ஒருவர் ரவுடியிடமே லஞ்சம் வாங்கி மாட்டிக் கிட்ட விவகாரம் அந்த மாவட்டத்துல பெரும் புயலை கிளப்பி இருக்காம்.. இந்த விவகாரத்தினால் ரொம்ப அப்செட் மூடுக்கு போன காக்கி உயர் அதிகாரி, உடனடியாக காக்கிகள் சிலரை இடமாற்றும் நடவடிக்கையை தொடங்கி இருக்கிறாராம்..

குறிப்பாக மாவட்டத்தில பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியில் இருக்கும் இன்ஸ்.கள், எஸ்.ஐ.க்களை வெளி மாவட்டத்துக்கு தூக்கி அடிக்க போறாராம்.. அதுமட்டுமில்லாமல் இன்ஸ்பெக்டராக இருந்து, பதவி உயர்வு பெற்று இந்த மாவட்டத்துக்கு வந்து இருக்கிறவங்களையும் மாற்ற பரிந்துரைக்க போறதா பேசிக்கிறாங்க.. மாவட்டத்துல பணியாற்றாதவர்களை கொண்டு வந்து போட்டா தான் கலெக்சன் விவகாரத்துக்கு முடிவு கட்டலாம் என காக்கி உயர் அதிகாரி நினைக்கிறாராம்..

எப்படியும் அடுத்த வருடம் தொடக்கத்துல இடமாற்றம் இருக்க தான் போகுது.. எனவே இப்போது வந்தாலும் நாங்க தயார்தான் என சில கலெக்சன் அதிகாரிகள் ரொம்ப கூலாகவே இருக்கிறார்களாம்.. கலெக்சன் காக்கி அதிகாரிகளுக்கு செக் வைப்பதுதான் இந்த மாவட்டத்துல பெரிய பிரச்னையாகவே இருக்காம்.. இவங்களுக்கு கலெக்சன் வாங்கி கொடுக்கவே புரோக்கர்கள் காவல் நிலையம் வாரியாக இருக்காங்களாம்..

இவங்களை கட்டுப்படுத்தினால் தான் கலெக்ஷன் குறையும்.. அதுவரைக்கும் காவல் நிலையம் கலெக்சன் நிலையமாகதான் இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்த சில மாஜி காக்கி அதிகாரிகள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பம்பர் பரிசில் பங்குகேட்டு அடம்பிடிக்கிறாராமே கைதி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல நாட்றத்துல தொடங்கி பள்ளியில முடியுற காக்கிகள் நிலையம் இருக்குது.. இங்க 2 ஸ்டார் காக்கி ஒருத்தரு, ஆகஸ்ட் மாதம் பயிற்சி முடிச்ச பின்னாடியும், அந்த காக்கிகள் நிலையத்தை விட்டு வரவில்லையாம்..

காரணம், நல்ல பசை உள்ள நிலையமாக இருக்குதாம்.. இதனால, வசூல் வேட்டை நல்லா நடத்தி வர்றாராம்.. இதுல ஹைலைட் என்னனா, கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒருத்தரை கைது செஞ்சி சிறையில அடைச்சிருக்காங்க.. அப்போ அவர்கிட்ட இருந்து 5 பம்பர் டிக்கெட் பறிமுதல் செய்து நீதியோட மன்றத்துல சப்மிட் செஞ்சிருக்காங்க.. அதுக்கு அதிர்ஷ்டவசமாக 1.5 கே பரிசும் கிடைச்சிருக்குதாம்.. இதனால உஷாரான அந்த சம்பந்தப்பட்ட ரெண்டு ஸ்டார் காக்கி, நீதியோட மன்ற காக்கியிடம் பேசி, பரிசு டிக்கெட் வாங்கி, பரிசையும் எப்படியோ வாங்கிட்டாங்களாம்..

அதோட 2 பேரும் பங்கு பிரிச்சிக்கிட்டாங்களாம்.. ஆனா, கைதிக்கு பங்கு போகலையாம்.. இதனால கைதி இதுல எனக்கு பங்கு கொடுத்தாகணும்.. இல்லைனா இந்த பிரச்னைய விடமாட்டேன்னு அடம் பிடிச்சு வர்றாராம்.. இதனால பங்குபோட்ட இரு காக்கிங்களும் மிரண்டு போய் இருக்காங்களாம்.. காக்கிகள் வட்டாரத்துல இந்த பம்பர் பரிசு பங்கு மேட்டர்தான் பரபரப்பு பேச்சாக இருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலத்துக்காரருக்கு நெருங்கிய இளம் வயதுக்காரருக்கு சீட் கிடைக்காம முற்றுப்புள்ளி வைக்க சீனியர்கள் தீவிரமாக வேலை செய்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டெல்டாவை சேர்ந்த இலை கட்சியின் மாநகர செயலாளரான இந்து கடவுளை குறிக்கும் பெயர்கொண்ட இளம் வயதுள்ள ஒருவருக்கு சேலத்துக்காரர் வரும் தேர்தலில் போட்டியிட பச்சைக்கொடி காண்பித்துள்ளாராம்.. அந்த நபர், சேலத்துக்காரரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறாராம்.. சேலத்துக்காரருக்கு நம்பிக்கையான நபர்களின் பட்டியலில் இவரும் உள்ளாராம்..

இதை கேள்விப்பட்டு இலை கட்சியின் முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம்.. இளம் வயதுள்ள நபருக்கு செக் வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ரகசிய திட்டங்களை தீட்டி வருகிறார்களாம்.. இதற்கான வேலை திரைமறைவில் நடந்து வருகிறதாம்.. அவருக்கு சீட் கிடைத்து விட்டால், நம்மளை மதிக்க மாட்டார்.. எனவே ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சீனியர்கள் தீவிரமாக வேலை செய்து வருகிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.