‘‘புல்லட்சாமியை புகழ்வதாக மலரத் துடிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளும் நல்லா உள்ளடி வேலை செய்ததா பேச்சு வருதே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதுக்கட்சி துவங்கிய உடனே மலர அடம்பிடிக்கும் விஜயமானவர், ரெண்டு மாதங்களுக்கு பிறகு ஒருவழியாக யூனியனில் பொது வெளி நிகழ்ச்சியை நடத்திய நிம்மதியில் இருக்காராம்.. கரூர் பலியால் தமிழகத்தில் அனுமதி கதவு திறக்க தாமதமாகவே புல்லட்சாமியை பயன்படுத்தி கூட்டத்தை முடித்த நிலையில், அதன் பொதுவான செயலரோ காக்கிகளுக்கு கைகூப்பி நன்றி கூறினாராம்.. பெண் காக்கி அதிகாரியிடம் வாங்கி கட்டிக் கொண்டதால் வழக்கு பாயுமோ என்ற அச்சத்தில்தான் இந்த கும்பிடு என சக காக்கிகள் முணுமுணுத்தார்களாம்.. இந்நிகழ்ச்சியில் இலாகா இல்லாத மலராத கட்சியின் சிறுபான்மை அமைச்சருக்கு ஆதரவாக விஜய் குரல் கொடுக்க, எல்லாத்துக்கும் புல்லட்சாமிதான் காரணம் என சிரித்தபடி பதில் தந்தாராம் அமைச்சரான முழம்குமார்.. அவருக்கு சாமி அருள் கொடுத்தால்தான் ஒதுக்குவார், அதுவரை காத்திருக்கத்தான் வேணும்.. என்றதோடு, எனக்காக குரல் கொடுத்த விஜயமானவருக்கு நன்றி என வீடியோ பதிவிட்டு வெளியிட்டாராம்.. இருவருமே புல்லட்சாமியை புகழ்வதாக நினைத்துக் கொண்டு மலரத் துடிக்கும் ரெண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நல்லா உள்ளடி செய்து இருக்கிறாங்கப்பா.. என்ற சிரிப்பலைதான் யூனியன் முழுக்கவாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சத்தமில்லாமல் பத்தவச்சுட்டாரு பலாப்பழக்காரர் என்பது தான் ஹனிபீ மாவட்டத்துல இப்போது பேச்சாக உள்ளதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பலாப்பழக்காரர் அரசியலை தாண்டி ஹனிபீ மாவட்டத்தில முக்கிய ெதாழில்களிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.. இம்மாவட்டத்தின் இரண்டெழுத்து தொகுதியில் இவர் சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த ஊர் நறுமண பொருளுக்கும் ரொம்பவே பேமஸ். கடந்த வாரம் இந்த ஊரில் உள்ள நறுமணப் பொருள் வியாபாரியின் குடோனில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையினர் தீவிரமாக சோதனை நடத்திட்டு போயிருக்காங்க.. இதன் பின்னணியில் பலாப்பழக்காரர் இருக்கிறார் என்பதுதான் தற்போது தொகுதி முழுக்க பேச்சா இருக்காம்.. இந்த ஊரில் தனிப்பட்ட முறையில் ஒரு நறுமணப் பொருளுக்கான ஏல மையத்தை பலாப்பழக்காரர் துவக்க உள்ளாராம்.. தனக்கு போட்டியாக இந்த ஏரியாவில் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக ஒன்றிய அரசின் மூலம் ரெய்டு நடத்த வைத்ததாக பரபரபரப்பாக பேசப்படுது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மலராத கட்சிக்கு மிரட்டல் விடுத்து, இலைக்கட்சி தலைவரை ரொம்பவே மகிழ்ச்சி படுத்திட்டாராமே சின்ன மம்மி புகழ் எம்பி தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் நடப்பாண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னையில நடந்தது.. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேனிக்காரரை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அதைப்பற்றி யாரும் வாய்திறக்கலையாம்.. அவரை சேர்த்தே ஆக வேண்டும் என மலராத கட்சி கொடுத்து வரும் தொல்லைகளை தாண்டி இரும்பு மனிதராக இலைக்கட்சி தலைவர் இருப்பதாக அவரது அடிப்பொடிகள் உற்சாகமாக சொல்லிக்கிட்டிருக்காங்க.. இந்த நெருக்கடியான நிலையில் சின்னம்மா என் தாய் என அதிகாலை நேரத்தில் ரொம்பவும் உறுதியாக சொன்ன எம்பி ஒருவர், பொதுக்குழுவில் மைக்கை பிடிச்சியிருக்காரு.. முன்னதாக, சில ஆண்டுகளுக்கு முன்பு கோபி கோட்டையன் தலைமையில் இலைக்கட்சி தலைவரை ஆறு மாஜிக்கள் சந்திச்சி, தேனிக்காரரை கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என சொல்லியிருக்காங்க.. ஆனால் அவரோ முடியவே முடியாதுன்னு மறுத்தது எல்லாம் பழைய கதை.. அந்த அணியில் இருந்த கோட்டையனை கட்சியில் இருந்தே தூக்கி எறிஞ்சிட்டார் இலைக்கட்சி தலைவர்..
இச்சூழலில், அந்த அணியில் இருக்கும் மற்றவர்கள் கோட்டையனுக்கே இந்நிலை என்றால், நம் நிலை என்னாவது என்ற நிலைக்கு தள்ளப்பட்டாங்களாம்.. அவர்கள் டெல்லிக்கு பிராது கொடுத்து ஒழுங்கு படுத்துங்கன்னு சொன்னதாகவும் ஒரு தகவல் பரவிச்சு.. இதனால இலைக்கட்சி தலைவரே விரக்தியில தான் இருந்திருக்காரு.. இதையெல்லாம் தாண்டி பொதுக்குழுவில் மைக்கை பிடிச்சி, நரம்பு படைக்க மலராத கட்சியை ஒரு பிடிபிடிச்சிட்டாராம் அந்த சின்னம்மா புகழ் எம்பி.. நம்மோடு உறவாடி நம்மை கெடுப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களை நாம் இனம் கண்டுகொண்டதினால் தான் பல்வேறு சதித்திட்டங்களை முறியடித்தோம் என கொக்கரித்தாராம்.. இதனை கேட்ட இலைக்கட்சி தலைவர் ெராம்பவே ஹேப்பியா ஆயிட்டாராம்.. ஆனால் மலராத கட்சியினர் ரொம்பவே ஷாக்காயிட்டாங்களாம்.. கூட்டணியில் வைத்துக்கொண்டே உறவாடி கெடுப்பதாக சொல்வதை தங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாதுன்னு பொறுமுறாங்களாம்.. அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவருக்கு டெல்லி ரொம்பவே டார்ச்சர் கொடுத்துக்கிட்டிருக்கு.. குறிப்பாக தேனிக்காரரை சேர்க்க வேண்டும், இல்லை என்றால் பல்வேறு வழக்குகள் பாயும் என நாள்தோறும் மிரட்டிக்கிட்டே இருக்காங்க.. பலமுறை சொல்லி பார்த்தும் கேட்கும் நிலையில் டெல்லி இல்லை. இலைக்கட்சி தலைவரால் நீக்கப்பட்ட தேனிக்காரரை டெல்லிக்கு அழைத்து பேசுவதை எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. அவர்மூலம் மிரட்டுவதை தான் மலராத கட்சியை உறவாடி கெடுப்பவர்கள் என்று சொல்லியிருக்காரு.. இனிமேலாவது டெல்லி புரிந்து கொள்ள வேண்டும் என அடிச்சி சொல்றாங்க இலைக்கட்சி தலைவரின் அடிப்பொடிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தலைநகரில் முகாமிட்டும் இருக்கும் மாஜி அமைச்சரின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்கிறாராமே சேலத்துக்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் வைத்தியானவர் தேனிக்காரர் அணியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வர்றார்.. தேனிக்காரர் அணியில் இருந்தாலும் வைத்தியானவர் பற்றி அடிக்கடி பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருக்காம்.. ஆனால், அவரது தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வராததால் புத்தாண்டுக்கு முன்பு முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபட்டு இருக்காரு.. சட்டமன்ற தேர்தலும் நெருங்கி வருவதால் அவரது நெருங்கிய ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையிலும் வைத்தியானவர் ஈடுபட்டுள்ளாராம்.. தலைநகரில் அவர், அவரது நெருங்கிய ஆதரவாளர்களுடன் முகாமிட்டு இருப்பதால் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தேனிக்காரரின் கண்காணிப்பை விட, சேலத்துக்காரரின் ரகசிய கண்காணிப்பு தான் தீவிரமாக இருக்குதாம்.. இதுபற்றிதான் டெல்டா மாவட்டம் முழுவதும் இலைக்கட்சிக்குள்ளே அரசல்புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.


