இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தானுடன் மோதினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. குஜராத் மாநிலம் பூஜ் நகரில் உள்ள ராணுவ தளத்தில் கடந்த வாரம் நடந்த விஜயதசமி விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் ஏதேனும் தவறான முயற்சிகளில் ஈடுபட்டால், அது வரலாற்றையும், புவியியலையும் மாற்றக்கூடிய வகையில் பதிலடி கொடுக்கப்படும்” என எச்சரித்திருந்தார்.
இதேபோல், இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, “ பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் அழிக்கப்படும்” என கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தியாவின் எச்சரிக்கை தொடர்பாக பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் வௌியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களின் சமீபத்திய அறிக்கைகள், அவர்களின் இழந்த நம்பகத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சி. வருங்காலங்களில் பாகிஸ்தானுடன் இந்தியா எந்த விதமான ராணுவ மோதல்களிலும் ஈடுபட கூடாது. மீறி ஈடுபட்டால் முழு பலத்துடன் இந்தியாவுக்கு பதிலடி தருவோம்” என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.