Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காங்கிரசின் நிலத்தில் நின்று கொண்டு காங்கிரஸ் கூட்டணியை குதர்க்கம் பேசும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் கண்டனம்

சென்னை: காங்கிரசின் நிலத்தில் நின்று கொண்டே, காங்கிரஸ் கூட்டணியை குதர்க்கமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதாக, திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மூப்பனார் சமாதியை கவுரவமாக காத்து வரும் காங்கிரஸ் கூட்டணியை பற்றி காங்கிரஸ் அறக்கட்டளை இடத்திலேயே நின்று கொண்டு, காங்கிரஸ் - திமுக கூட்டணியை விமர்சித்து, நிர்மலா அம்மா பேசுவது பண்பாடான செயலா?

மூப்பனார் பிரதமராவதை தடுத்த சக்திகள் என அரைத்த மாவையே அரைக்கிறார். இதை மூப்பனாரையே செயல்படவிடாமல் தடுத்த சக்திகள் பேசுவது விந்தைதான். தமிழக பாஜவுக்கு முகவரி தந்த பெருமை இல.கணேசனுக்கு உண்டு. அவரின் மரணத்திற்கு கூட தலைமையிலிருந்து பிரதமர், அமித்ஷா என அழைத்து வரவேண்டிய தமிழச்சி நிர்மலா, தானே வராமல் 15 நாள் கழித்து வந்து படத்துக்கு மாலை போட்டுவிட்டு, தமிழனைப்பற்றி பேசிட தங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஒருமுறைக்கு இருமுறை இல.கணேசனுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், நாகாலாந்து கவர்னருக்கு தமிழகத்திலேயே அரசு மரியாதை தந்தவர் தளபதி. தெரியாத பழைய நிகழ்வை நீங்கள் சொல்வதால் தெரிந்த நிகழ்வை நான் சொல்கிறேன்.

இரவு பகலாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கேயே தங்கி, பந்தலிட்டு சிறப்பான ஏற்பாடு செய்தார் என எச்.ராஜாவால் - வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவர்கள் திமுகவினர்.எடப்பாடியான உங்கள் முதல்வர் வேட்பாளர் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே 15 நாட்கள் கழித்து தான் இல.கணேசன் படத்துக்கு மாலை போடுகிறார். உங்கள் அருகில் எடப்பாடி நின்றபோது தான் கேட்கவில்லை. இப்போதாவது போனில் கேட்டு சொல்லுங்கள், ஏன் தாமதம் என்று. பழனிசாமியை நேற்று வரை அண்ணாமலை கேவலமானவர் என்று சொல்லிவிட்டு, இன்று எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்வது ஏன் தெரியுமா? இப்படித்தான் சிவசேனா தலைமையை ஏற்பது போல ஏற்றுவிட்டு, ஏக்நாத் ஷிண்டேவை முதலில் முதல்வராக்கி விட்டு மறுமுறை பா.ஜ. முதல்வர் ஆனது போல, பா.ஜ. தமிழகத்திலும் திட்டமிடுகிறது.

பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என்று சொன்னால் கூட்டணி மந்திரி சபைக்கு ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறது. தனது பெற்ற தாய்க்கு சமமாக மதிக்கப்படவேண்டிய சசிகலாவையே நடுரோட்டில் நிற்க வைத்த எடப்பாடிக்கு பா.ஜ.வை ஏமாற்ற எவ்வளவு நேரம் ஆகும். அப்படி எடப்பாடி பா.ஜ.வை ஏமாற்றாவிட்டால் அவர் ஏமாந்து, சுதந்திரா கட்சி என ஒரு கட்சி இருந்தது. இப்போது இல்லை என்பது போல ஒரு காலத்தில் அ.தி.மு.க. என்று இருந்தது இப்போது இல்லை. அதற்கு முதல்வர்கள் எல்லாம் இருந்தார்கள், எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா, ஓ.பி.எஸ் என பலர் இருந்தனர். அந்த கட்சியின் கடைசி முதல்வர் எடப்பாடி, முடிந்த ஆண்டு மார்ச் 2021 என வரலாறு பேசும்.

தளபதி மருத்துவமனையிலிருந்து வந்தவுடன் பீகாருக்கு செல்கிறார். இப்போது ஜெர்மன், லண்டன் என தமிழர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள் என வேண்டி விழைகிறார். அதனால்தான் இந்தியாவின் முதல் தொழில் நகரமாக தமிழ்நாட்டினை உயர்த்தி காட்டி வருகிறார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.