Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காங்., ஆர்ஜேடி பாதுகாக்க முயற்சிக்கும் சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் ஒவ்வொருவரையும் விரட்டுவோம்: பீகாரில் பிரதமர் மோடி பிரசாரம்

பூர்னியா: பீகாரின் பூர்னியாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: பீகார், மேற்குவங்கம், அசாம் போன்ற கிழக்கு மாநிலங்களில் ஊடுருவல்காரர்களால் மக்கள்தொகை நெருக்கடி நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகத்தான் நான் செங்கோட்டையில் சுதந்திர தின உரையில், மக்கள்தொகை ஆய்வுப்பணியை அறிவித்தேன். ஆனால் வாக்கு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் அவர்களின் சகாக்கள் வெளிநாட்டு ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவும் நபர்களை பாதுகாப்பதன் மூலம் பீகார் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளங்களை காங்கிரஸ், ஆர்ஜேடி போன்ற எதிர்க்கட்சிகள் ஆபத்தில் ஆழ்த்தி வருகின்றன. வெளிநாட்டு ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி யாத்திரை மேற்கொள்ளும் அளவுக்கு அவர்கள் வெட்கமற்றவர்களாகி விட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்த வரை, இங்குள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் விரட்டியடிப்பதில் உறுதியாக உள்ளோம் என்பதை நான் கூற விரும்புகிறேன்.

ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முயற்சிக்கும் அரசியல் தலைவர்களுக்க நான் சவால் விடுகிறேன். ஊடுருவல்காரர்களை நாங்கள் தொடர்ந்து விரட்டுவோம். ஊடுருவலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம். நாடு அதன் பலனைப் பெறும் என்பது மோடியின் உத்தரவாதம்.வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் மோசடி என பிரச்னைகள் எழுப்பும் போர்வையில் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முயற்சிக்கும் காங்கிரஸ், ஆர்ஜேடிக்கு நாட்டு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள் என்றார்.

* பீகார் மக்களை காங். அவமதித்தது

சிகரெட், புகையிலை பொருட்களுக்கான ஜிஎஸ்டி கடுமையாக அதிகரிக்கப்பட்ட நிலையில், பீடிக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இது பீகார் தேர்தலை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும், பீடி, பீகார் இரண்டுமே பீ என்ற எழுத்தில் தொடங்குவதால் அவை பாவமானவை அல்ல என்றும் கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டது சர்ச்சையானது. அதனால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘‘காங்கிரஸ் தலைவர்கள் பீடியுடன் பீகாரிகளை ஒப்பிட்டு இம்மாநிலத்தையும், பீகார் மாநிலத்தையும் அவமதித்து விட்டனர்’’ என்றார்.