மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு பணி கூட்டம்: மேலிட பார்வையாளர் ரகுவீரரெட்டி வருகை
சென்னை: மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு பணி கூட்டத்தில் பங்கேற்க மேலிட பார்வையாளர் ரகுவீரரெட்டி வருகை தர உள்ளதாக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் கூறியுள்ளார். இதுகுறித்து மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோரது வழிகாட்டுதல் படி, மாவட்ட காங்கிரஸ் தலைமையின் மறு சீரமைப்பு பணிகள் மாநிலங்கள் வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டிலும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு இதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் மாவட்ட வாரியாக பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு அங்கமாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பார்வையாளராக ரகுவீரரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு உதவிடும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவுப்படி, முன்னாள் தலைவர் தங்கபாலு, துணை தலைவர் மணிரத்தினம், செயலாளர்கள் ஜெயபிரகாஷ், தயானந்த் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில், கட்சியின் தற்போதைய பலம், கள நிலவரம், வருங்கால வளர்ச்சி குறித்த ஆலோசனை, வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார் நிலை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை வழங்க வருகை தர உள்ளனர். அதன்படி, வரும் 29ம்தேதி காலை 10 மணிக்கு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம், திருவல்லிக்கேனி கோயில் தெரு எம்.எஸ்.மகாலில் நடைபெற உள்ளது.
30ம்தேதி துறைமுகம் தொகுதி பிராட்வே பிரகாசம் ரோட்டில் உள்ள மித்ரன் பார்ட்டி ஹால், 1ம்தேதி ஆயிரம் விளக்கு தொகுதிக்கு, சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் உள்ள மீனாட்சி மகால், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ள விநாயகா ஹாலிலும் நடைபெறுகிறது. 3ம்தேதி சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களுடன் சந்திப்பு, 4ம்தேதி மனுதாரர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

