காங். மாவட்ட தலைவர்களை தேர்வு செய்யும் 38 பேர் குழு தமிழகம் வருகிறது: டிசம்பருக்குள் பட்டியலை ஒப்படைக்க திட்டம்
சென்னை: தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு கட்சி ரீதியான மாவட்டங்களுக்கு தகுதியான மாவட்ட தலைவர்களை நியமிக்கும் பணிகளை டெல்லி தலைமை தொடங்கியுள்ளது. கோஷ்டி அடிப்படையிலான மாவட்ட தலைவர்களை அகற்றி விட்டு, திறமையாக செயல்படக்கூடிய மாவட்ட தலைவர்களை தேர்வு செய்யும் வகையில் 38 பேர் கொண்ட தேர்வுக் குழுவை டெல்லி தலைமை அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், தமிழக காங்கிரசில் கட்சி ரீதியாக உள்ள 77 மாவட்ட தலைவர்களை நியமிக்கப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள 38 பேர் கொண்ட தேர்வு குழு இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் வருகை தர உள்ளது. இந்த குழுவில் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாக சென்று ஆய்வு செய்ய உள்ளனர். கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகளில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள், அதிக ஆர்வத்துடன் செயல்படக்கூடியவர்கள், ஆர்ப்பாட்டம், போராட்டங்களை முன்னின்று நடத்தி மக்கள் செல்வாக்கு உள்ள நிர்வாகிகள் யாரெல்லாம் உள்ளனர் என்பது குறித்து விசாரிக்க உள்ளனர்.
அதன் அடிப்படையில் கட்சி ரீதியான ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 பெயர்கள் கொண்ட பட்டியலை தயாரித்து டிசம்பர் மாத இறுதிக்குள் டெல்லி தலைமையிடம் ஒப்படைக்க உள்ளனர். அதை டெல்லி தலைமை ஆய்வு செய்து, 3 பேர் கொண்ட பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்து தமிழக காங்கிரஸ் கட்சிக்கான மாவட்ட தலைவர்கள் பட்டியலை விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த குழுவின் வருகை தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று சூம் மீட்டிங் மூலம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


