பாஜகவை வீழ்த்த மாபெரும் திட்டம்; 24ம் தேதி காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம்: தேர்தல் நடைபெறவுள்ள பீகாரில் நடக்கிறது
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வியூகத்தை தீவிரப்படுத்தும் வகையில் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்த உள்ளது. பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் 1,300 கிலோமீட்டர் தொலைவிற்கு ‘வாக்காளர் உரிமை யாத்திரை’யை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இந்த யாத்திரைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த எழுச்சியை வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியாக மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இதன் அடுத்தகட்டமாக, பீகாரில் கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக, காங்கிரஸ் செயற்குழுவின் கூட்டம் வரும் 24ம் தேதி தலைநகர் பாட்னாவில் நடைபெற உள்ளது. இந்த விரிவான கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் முதலமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள் மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் என முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்தப் பணிகள் பாஜகவுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ‘வாக்குத் திருட்டு’ தொடர்பான இந்த குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை தேசிய அளவில் தீவிரப்படுத்துவது குறித்தும் இந்த செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. பீகார் தேர்தலை மனதில் கொண்டு, அதன் தலைநகரிலேயே காங்கிரசின் செயற்குழு கூட்டம் நடத்தப்படுவது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.