Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காங்கோவில் கடந்த 5 மாதத்தில் 17,000 பேர் பாலியல் வன்முறையால் பாதிப்பு: ஐக்கிய நாடுகள் பகீர் அறிக்கை

காங்கோ: போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு காங்கோ ஜனநாயக குடியரசில், கடந்த ஆண்டு ஐந்து மாதங்களில் மட்டும் 17,000க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், காங்கோ படைகளுக்கும், ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்தபோது, வடக்கு கிவு மாகாணத்தில் இந்த கொடூர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் பலர், கொடூரமான ஆயுதங்களால் தாக்கப்பட்டும், கூட்டாக சேர்ந்து பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டும், பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டும் மருத்துவ உதவி நாடியதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு முழுவதும் மொத்தம் 22,000 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது அதற்கு முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த மோதல்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ள சூழலில், கத்தார் மற்றும் அமெரிக்காவின் அமைதி முயற்சிகள் தோல்வியடைந்து வன்முறை இன்றும் தொடர்கிறது. வடக்கு கிவுவில் இருந்து தெற்கு கிவு மாகாணத்திற்கும் மோதல் பரவியதால், அங்குள்ள ஐ.நா. அமைதிப்படை தனது பணிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 823 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 416 பெண்களும், 391 சிறுமிகளும், 7 சிறுவர்களும், 9 ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு தேடி வயல்வெளிகளுக்கும், இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கும் செல்லும் அப்பாவி மக்கள் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.