முரணான ஆவணங்கள், சாட்சியம், காலதாமதம் 230 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 4 பேர் விடுதலை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: கடந்த 2022 மார்ச் 10ம் தேதி கும்மிடிப்பூண்டி சரக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலில் ஆந்திராவிலிருந்து ஸ்கார்பியோ கார் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தல் நடப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில் சம்பந்தப்பட்ட ஸ்கார்பியோ காரை கும்மிடிப்பூண்டி சரக போலீசார் சோதனை செய்ததில், அதில் 230 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த மதுரை மாவட்டம், கமாலாப்பட்டியை ேசர்ந்த அய்யர் (55), அல்லிநகரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (23), எல்லீஸ் நகரை சேர்ந்த சவுந்தரபாண்டி (22), திருச்சி எட்வின் ராஜ் (24) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிய போலீசார் மற்ற 4 பேர் மீதும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சென்னை முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சார்பில் வழக்கறிஞர் டி.சீனிவாசன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மிக அதிகமான எடையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கில் பொது சாட்சிகள் எவரும் சாட்சியம் அளிக்கவில்லை. கஞ்சாவை பறிமுதல் செய்ததை போலீஸ் தரப்பு நிரூபித்துள்ளது. போலீசார் மட்டுமே சாட்சியம் அளித்துள்ளனர்.
ஆனால், சட்டப் பிரவுகளின்படி பொது சாட்சியம் முக்கியமானது. கைது செய்யப்பட்டவர்கள் ஆந்திராவிலிருந்துதான் வந்தார்கள் என்பதை போலீசார் நிரூபிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் காலதாமதமாக போலீசார் ஒப்படைத்துள்ளனர். கஞ்சாவை கவரப்பேட்டை-சத்தியவேடு சந்திப்பில் சோதனை நடத்தியதாக கூறும் போலீசார் கவரப்பேட்டை-மாடம்பாக்கம் சந்திப்பில் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை. இந்த வழக்கில் 4 பேரையும் தவறாக சேர்த்துள்ளனர் என்றும் வாதிடப்பட்டுள்ளது. மகஜரில் 230 கிலோ கஞ்சா என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றத்தில் 236 கிலோ 580 கிராம் கஞ்சாவை ஒப்படைத்துள்ளனர். கார் யாருக்கு சொந்தமானது என்று நிரூபிக்கவில்லை. நீதிபதி முன்பு கஞ்சா மாதிரிகள் எடுக்கப்படவில்லை. எனவே, தடய அறிவியல் பரிசோதனை அறிக்கை ஒரு சாதாரண காகிதம்தான். இந்த வழக்கில் போலீசார் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டனர். எனவே, 4 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று நீதிபதி உத்தரவிட்டார்.