Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிபந்தனைகளை ஏற்க மறுத்து தொடர்ந்து அடம் எடப்பாடி பிரசாரத்துக்கு பாஜ தடை: மீண்டும் டெல்லி பயணம்? பரபரப்பு தகவல்கள்

சேலம்: எடப்பாடி பிரசாரத்துக்கு பாஜ தடை விதித்து உள்ளதாகவும் அவர் மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். 4 கட்டமாக சுமார் 180 தொகுதிகளில் பிரசாரத்தை முடித்துள்ளார். 5வது கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்னும் தொடங்கவில்லை. குறிப்பாக கரூரில் நடந்த விஜய் கட்சியின் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியாகினர்.

இதற்கு பின்னர் 2 மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்திருந்தாலும் அடுத்தகட்டமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்க தயங்கி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் நேரத்தில் அவருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவ்வாறு குரல் கொடுப்பதன் மூலம் விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் வரவழைத்து விடலாம் என்ற கணக்கை போட்டு செயல்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இருந்தாலும் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என கூறிவிட்டார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் எனவும் துணை முதல்வர் வேண்டுமானால் விஜய்க்கு வழங்கலாம் எனவும் டீல் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை மதுரையை சேர்ந்த மாஜி அமைச்சர் உதயகுமாரும் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கெஞ்சாத குறையாக வெளிப்படையாகவே தவெக அதிமுகவுடன் கூட்டணிக்கு வர வேண்டும். ஆந்திராவில் பவன் கல்யாண் எப்படி கூட்டணி அமைத்து வென்று துணை முதல்வரானாரோ, அதுபோல விஜய்யும் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

இதுபோன்ற நெருக்கடியான சூழலில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி, அடுத்தக்கட்ட சுற்றுப் பயணத்தை அறிவிக்காமல் இருந்து வருகிறார். சேலத்தில் முகாமிட்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமியை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பொறுப்பாளர் பாண்டா உள்ளிட்டோர் சமீபத்தில் சந்தித்து பேசிவிட்டு சென்றனர். அப்போது பிரிந்து கிடக்கும் அதிமுக நிர்வாகிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் தேர்தலை பலத்தோடு சந்திக்கலாம் எனவும் அதற்கு பிறகு தேர்தல் பிரசாரத்தை தொடரலாம் எனவும் அவர்கள் கூறியதாக தெரிகிறது.

மேலும் கட்சிக்கு சசிகலா எனவும், ஆட்சிக்கு நீங்கள் (எடப்பாடி) என்றும் இருந்தால் ஒருங்கிணைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியதாகவும், இதற்கு எடப்பாடி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் 5ம்கட்ட பிரசாரத்தை அவர் தொடங்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சேலத்தில் முகாமிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, நேற்று மாலை கோவை புறப்பட்டு சென்றார். அங்கிருந்து சென்னைக்கு சென்று இன்று சி.வி.சண்முகம் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.

இதற்கிடையில், பாஜ பொறுப்பாளர் விதித்த நிபந்தனைகளை எடப்பாடி ஏற்காததால் மீண்டும் அவர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, பிரசாரத்துக்கு பாஜ தடை விதித்து உள்ளது, அதிமுகவை ஒன்றிணைக்க அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்தே எடப்பாடியின் அடுத்தகட்ட பிரசார பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று காலை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.