முழுமையான விசாரணைக்கு பிறகே கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: முழுமையான விசாரணைக்கு பிறகே வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை தெரிவித்ததாக, வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. திருப்பத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்களிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜோலார்ப்பேட்டை தொகுதி தேர்தல் அதிகாரி தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருமான வரித்துறை, வருவாய் கோட்டாட்சியர் நடத்திய விசாரணையில், கே.சி.வீரமணி தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறி இருந்த அசையும் சொத்துகளின் மதிப்பிற்கும், வருமான வரி கணக்கில் கூறப்பட்ட மதிப்பிற்கும் 14 கோடியே 30 லட்ச ரூபாய் வித்தியாசம் உள்ளது கண்டறியப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி, நேரடி வரிகள் வாரியம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வேட்புமனுவில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் அதுகுறித்து புகார் மனு தாக்கல் செய்ய தொகுதி தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய கோரி கே.சி.வீரமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க கே.சி.வீரமணி தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை வரும் 18ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.