புகார் மீது நடவடிக்கை எடுக்காததாக குற்றச்சாட்டு காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் பகுதியில் சிவக்குமார் என்பவர், ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். இங்கு முருகன்-பார்வதி தம்பதியர் ஸ்வீட் வாங்க வந்துள்ளனர். அப்போது, 2 தரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டு முருகன் ஸ்வீட் ஸ்டால் மீது கல்வீசி தாக்கியுள்ளார். இரு தரப்பினரும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முருகன் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் என்ற பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவக்குமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்துள்ளது. சிவக்குமாரின் மருமகன் லோகேஷ், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதியின் பாதுகாவலராக பணியாற்றியவர். அவரையும் வழக்கில் சேர்க்குமாறு முருகன் தரப்பு கோரிக்கை விடுத்ததை காவல்துறையினர் ஏற்கவில்லை. இதையடுத்து, முருகன் தரப்பு காஞ்சிபுரம் நீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல், இந்த வழக்கு குறித்து முறையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில், முறையான அறிக்கை கொடுக்காததால் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி நேரில் ஆஜராகுமாறு நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் காஞ்சிபுரம் சட்டம் -ஒழுங்கு டிஎஸ்பி சங்கர் கணேஷ் நேற்று முன்தினம் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் முறையாக விசாரணை நடத்தாததாக கூறி டிஎஸ்பி சங்கர் கணேஷை செப்டம்பர் 22ம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து, டிஎஸ்பி சங்கர் கணேஷை போலீஸ் வாகனத்தில் கிளைச் சிறைக்கு ஏற்றிச் செல்ல போலீசார் ஒத்துழைக்க மறுத்ததால் நீதிபதி தன்னுடைய காரில் சிறைக்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிபதியை சிறையில் அடைக்க உத்தரவிட்ட பின்னர் விஷ்ணு காஞ்சி இன்ஸ்பெக்டர் சங்கர், டிஎஸ்பி சங்கர் கணேஷை நீதிமன்றத்தில் இருந்து அவசர அவசரமாக இழுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தது, பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
நீதிமன்றத்தில் இருந்து கிளைச் சிறைக்கு சென்ற டிஎஸ்பி சங்கர் கணேஷ், அங்கிருந்து தப்பியதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், காலையில் இருந்து நீதிமன்றத்தில் காத்திருந்த டிஎஸ்பி இயற்கை உபாதை கழிக்க சென்றதையே, தப்பிச் சென்றதாக தவறான தகவல் வெளியாகி உள்ளது என்று போலீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, டிஎஸ்பி சங்கர் கணேஷ், மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில், மாவட்ட நீதிபதியின் உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் எஸ்பி, டிஎஸ்பி மற்றும் வாலாஜாபாத் ஆய்வாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு எதிராக புகார் அளித்த பாதுகாப்பு அதிகாரி மீதான முன்விரோதம் காரணமாக, அவரது மாமனார் சிவாவுக்கு எதிரான வழக்கில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது அதிகார துஷ்பிரயோகம் என்பதால், உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புகார் முடித்து வைக்கப்பட்ட நிலையில், அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பதிவு செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி.யை காலையில் இருந்து மாலை வரை நீதிமன்றத்தில் அமர வைத்ததுடன் இறுதியில் சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வது புலன் விசாரணை அதிகாரியின் அதிகாரத்துக்கு உட்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது. டி.எஸ்.பி.யை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் முன்பு நிர்வாக ஒப்புதல் பெற வேண்டும். இந்த நடைமுறையை மாவட்ட நீதிபதி பின்பற்றaவில்லை.
எனவே, டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
* டி.எஸ்.பி.யை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கும் முன்பு நிர்வாக ஒப்புதல் பெற வேண்டும். இந்த நடைமுறையை மாவட்ட நீதிபதி பின்பற்றவில்லை.