Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்

*குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி : வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக துவரை, அவரை மானியங்கள், உழவு, உரம் உட்பட 12 வகையான மானியங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இம்மானியங்கள் பெற ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், அவர்களது வங்கி கணக்கிற்கு பணம் விடுவிக்கப்படவில்லை.

எனவே, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு உடனடியாக மானியங்களை விடுவிக்க வேண்டும். மேலும், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் மானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிப்பதில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த விவசாயிக்கு மானியம் வழங்கி உள்ளனர்.

இது போன்ற முறைகேடுகள் களைய வேண்டும். வனவிலங்குளால் ஏற்படும் பயிர்சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, ராகி ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25ஆயிரம் இழப்பீடு வழங்குவதாக கூறுகின்றனர். இழப்பீடு பெற தேவையான ஆவணங்களுடன் விவசாயிகளுக்கு விண்ணபிக்க ரூ.800 வரை செலவாகிறது. ஆனால், ராகி தோட்டத்தை ஆய்வு செய்யும் அலுவலர்கள் ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை மட்டுமே பரிந்துரை செய்கின்றனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். தேன்கனிக்கோட்டை வட்டத்தில் மின்வாரியத்தில் முறைகேடுகள் அதிகளவில் நடைபெறுவதை தடுக்க, ஒரே இடத்தில் நீண்டக்காலமாக பணியாற்றி வரும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

போச்சம்பள்ளியில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கூட்டுறவுத்துறையின் மூலம் இ-நாம் முறையில் நடைபெறும் ஏலத்தை விவசாயிகள் பார்வையிடும் வகையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். காமன்தொட்டி ஊராட்சியில் ஏற்கனவே 5 குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது, மேலும் 2 குவாரிகள் நடத்த அனுமதியளிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

ஒரே ஊராட்சியில் 7 குவாரிகள் நடத்தினால், அங்கு வசிக்கும் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, புதிய குவாரிகள் தொடங்க அனுமதியளிக்க கூடாது. போச்சம்பள்ளியில் அரசு சார்பில் மாங்கூழ் தொழிற்சாலை தொடங்க வேண்டும்.

மல்லிகை தோட்டத்தில் செடிகளை கவாத்து செய்ய பயன்படுத்தப்படும் பேட்டரி இயந்திரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதற்கு பதிலளித்து மாவட்ட கலெக்டர் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் பேசுகையில், மானிய தொகைகள், எதிர்வரும் 15 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய, மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மானியங்கள், திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்வாரிய முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகம் ஏரிகளின் கரைகளை பலப்படுத்தவும், தூர்வாரும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, விவசாயிகள் வண்டல் மண் எடுக்க ஏரிகளின் விவரங்களுடன் விண்ணப்பம் செய்தால், அரசின் அனுமதி பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், என்றனர்.