சென்னை : கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான விதிகளை திருத்தம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கருணை அடிப்படையில் அரசு பணிக்கு நியமிக்கப்படுவோருக்கான நடைமுறையில் தமிழ்நாடு அரசு சில மாற்றத்தை அறிவித்துள்ளது. இனிமேல், இத்தகைய நியமனங்கள் மாவட்டத் தொகுப்புகளின் அடிப்படையில்லாமல், மாநிலம் முழுவதும் ஒரே மூத்தத்தன்மை பட்டியலின் அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படும்.
கடந்த காலங்களில் மாவட்ட ஆட்சியர் அல்லது தலைமைத் துறை அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் இப்போது மாநில அளவிலான பட்டியலில் சேர்க்கப்படும். இந்த பட்டியல் பராமரிப்புக்காக தனித்துவமான இணையதளம் உருவாக்கப்பட உள்ளது. அந்த இணையதளம் செயல்படத் தொடங்கும் வரை, 2025 ஆகஸ்ட் 4க்கு முன்பு நிலவிய விதிமுறைகள் பின்பற்றப்படும்.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகநந்தம் வெளியிட்டுள்ள அரசாணையின் கூறியிருப்பதாவது : அரசு ஊழியர் மரணம் அடைந்தால் அல்லது மருத்துவ காரணங்களால் ஓய்வுபெற்ற தேதி முதல் மூன்று ஆண்டுக்குள் காலிப் பணியிடம் இருந்தால் மட்டுமே நியமனம் வழங்கப்பட வேண்டும். மேலும், கருணை அடிப்படையிலான நியமனங்களுக்கு பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நியமனம் பெறும் குடும்பம் உண்மையிலேயே பொருளாதார நெருக்கடியில் இருக்க வேண்டும். குடும்பத்தில் யாரும் அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் நிரந்தர வேலையில் இருக்கக்கூடாது. ஒரே குடும்பத்தில் ஒருவர் மட்டுமே நியமிக்கப்படலாம். நியமிக்கப்பட்டவர் தகுதியுள்ளவராக இருந்தால், சேர்ந்த நாளிலிருந்து ஒரு ஆண்டுக்குள் அவரது சேவை முறையாக மாற்றப்பட வேண்டும்.
அத்துடன், தமிழ்நாடு அரசு ஊழியர் சட்டம், 2016இன் பிரிவு 27இன் கீழ் உள்ள ஒதுக்கீட்டு விதிகள், கருணை அடிப்படையிலான நியமனங்களுக்கு பொருந்தாது. காலிப் பணியிடங்களின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்குள் பணி வழங்கும் வகையில் திருத்தம் மாநில அளவில் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.