சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை சூளைமேட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநில துணைச் செயலாளரான மு.வீரபாண்டியன், புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் பதவி வகித்து வந்தார். கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறும். இதில் 3 முறை தொடர்ந்து முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் புதிய மாநில செயலாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலர் பங்கேற்றனர். 101 உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள் 9 பேர் என மொத்தம் 110 பேர் ஒருமனதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு. வீரபாண்டியனை தேர்வு செய்தனர். சென்னை வியாசர்பாடியில் மு.வீரபாண்டியன் வசித்து வருகிறார். 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2018ம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைப்பான தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தார்.
கடந்த 2018 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை மாநில செயலாளராக பதவி வகித்து வந்தார். 1979ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளார். கட்சியின் பல்வேறு பதவிகளில் இருந்து வந்த வீரபாண்டியன் தற்போது மாநில செயலாளராக தேர்வாகி உள்ளார். அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவராக சுப்புராயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராவும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினுடைய மாநில பொதுச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றி வருபவர் மு.வீரபாண்டியன். 40 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு உழைக்கும் மக்களுக்காக போராடி வருபவர். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி எல்லையற்ற மகிழ்ச்சியை எனக்கு தருகிறது.
மு.வீரபாண்டியன் மார்க்சிய, லெனினிய கொள்கைகளையும், பொதுவுடமை சித்தாந்தத்தையும் நேர்த்தியாக கற்றுத் தேர்ந்து அவற்றுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட செங்கொடி வீரர். பொறுப்பில் இருந்த முத்தரசனை போலவே சக தோழர்களிடமும், அனைத்துக் கட்சியினரிடமும் மிகுந்த நேசத்தோடு மதித்து பழகக் கூடிய பண்பாளர் மு.வீரபாண்டியன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுவையும், மதிப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய வகையில் அவரது பணி சிறக்கவும், அவர் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறவும் மதிமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மமக தலைவர் ஜவாஹிருல்லா: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மு.வீரபாண்டியனின் பணி சிறக்க இதயப்பூர்வமான வாழ்த்துகள். கட்சியின் மாநில துணை செயலாளராக பன்னெடுங்காலம் பணியாற்றியவர். எனது நீண்ட கால நண்பர். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூக நீதி இயக்கங்களில் முக்கிய பங்காற்றியவர். தோழமையுடன் அனைவரிடமும் பழகக்கூடியவர். ஆக்கப்பூர்வமான கருத்துக்களை நேர்த்தியாகவும் நிதானமாகவும் வெளிப்படுத்தக்கூடியவர். அவரின் இந்த பொறுப்பு மேலும் சிறக்க வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
* முதல்வர் வாழ்த்து
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் சமூக வலைதள பதிவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.வீரபாண்டியனுக்கு வாழ்த்துகள். இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசனுக்கு நன்றி. ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம்.