தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும் அதற்கு துணை போகும் துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை: முதலமைச்சர்
சென்னை: தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும் அதற்கு துணை போகும் துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் 'உடன்பிறப்பே வா' கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் இடையே முதல்வர் பேசியதாவது; மக்களின் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகமாகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். அனைவரும் அயராது பாடுபட வேண்டும். வெற்றியை ஈட்ட அயராது பாடுபட வேண்டும்.
இடையூறுகள், அவதூறுகள் எதுவாயினும் அவற்றை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது பொதுமக்களின் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல. உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் வளர்ந்து வருகிறது. திமுக. ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் புதிதாக 77 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
இந்த அரசு அமைந்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் 10 ஆண்டுகளாகப் பாடுபட்ட திமுக தொண்டர்களின் அளப்பரிய உழைப்பே, உங்களில் ஒருவனான நான், முதலமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு அடிப்படை என்பதை ஒருபோதும் மறந்ததில்லை. திமுகவினரின் மனக்குரலை அறிந்துகொள்ளதான், 'உடன்பிறப்பே வா' எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
பொதுமக்களை சந்திக்கும்போது, அவர்களிடம் தந்தை பெரியாரின் சமூகநீதி வழியிலும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாமல் பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த பாதையிலும், முத்தமிழறிஞர் கலைஞரின் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், உலகத்தால் மனிதன் எனும் வழியில் அணுக வேண்டும்.
தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுக்கப்படுகிறது" என பேசினார்.