Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொதுவான சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திடம் தவெக சார்பில் மனு: 5 சின்னங்களை தேர்வு செய்த விஜய்

சென்னை: பொதுவான சின்னம் தவெகவுக்கு ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர். இதில் குறிப்பிட்டுள்ள 10 சின்னங்களில் 5 சின்னங்களை விஜய் நேரடியாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வரும் சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு கட்சியை தொடங்கிய விஜய், தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த செப்டம்பர் 27ம்தேதி கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மேலும் கரூர் சம்பவத்திற்கு பின்னர் விஜய் தனது அரசியல் செயல்பாடுகளில் மவுனம் காத்து வருகிறார். கரூர் சம்பவத்தை கையில் வைத்துக் கொண்டு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விஜயுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இதற்கிடையே கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தற்காலிகமாக தடை செய்துள்ளார். மறுபுறம் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 குடும்ப உறுப்பினர்களை இதுவரை சந்திக்காதது அரசியல் களத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்துக்கு பிறகு தவெக மொத்தமாக முடங்கி போய்விட்டதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நோக்கி விஜய் நகர்ந்து இருக்கிறார். தவெக கட்சி தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கபடவில்லை என்று சொல்லப்பட்ட செய்தி பெரிய அளவில் பேசுபொருளானது.

இப்படியான சூழலில் தான் தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் ஆணையத்தை விஜய் நாடி இருக்கிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருவதாக தவெக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கட்சிக்கான பொது சின்னம் ஒதுக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்திடம் இன்று தவெக சார்பில் அதிகாரப்பூர்வமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில், தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அர்ஜுனமூர்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் ஆணையர்களிடம் மனுவை வழங்கினர். தமிழக வெற்றிக் கழகம் மனுவில், கட்சிக்கான 10 விருப்ப சின்னங்களின் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.

அதில், விஜயின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் எளிதில் மனதில் பதியும் வகையில் ‘கப்பல், விசில், ஆட்டோ, பேட்’ போன்ற சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது கிடைத்த தகவலின்படி, இச்சின்னங்களில் 5 சின்னங்களை விஜய் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் ெகாடுத்த மனுவில், ‘‘தமிழக வெற்றிக் கழகம் கடந்த பிப்ரவரி 7ம்தேதி அன்று பதிவு செய்யப்பட்ட கட்சியாகும். மாநிலக் கட்சி அந்தஸ்து பெறும் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் அமைப்பு வலுவாக உருவாக்கப்பட்டுள்ளதால், 234 தொகுதிகளிலும் போட்டியிட கட்சி தயாராக உள்ளது. எனவே, உடனடியாக கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, புதிய கட்சிகள் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது சின்னம் பெற முன்கூட்டியே மனு அளிக்க வேண்டும்.

அதன்படி, தவெக தேர்தல் ஆணையத்தில் முதன்மையாக மனு தாக்கல் செய்த முதல் கட்சியாகி உள்ளது. தேர்தல் ஆணையம் மொத்தம் 184 சின்னங்களை பட்டியலிட்டுள்ளது. கட்சிகள் அதிலிருந்து குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 10 சின்னங்கள் வரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட சின்னங்கள் குறித்து ஆணையம் ஆய்வு செய்து, ஒவ்வொரு கட்சிக்கும் ஏற்றதாக கருதப்படும் ஒரு சின்னத்தை ஒதுக்கும். அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்களுக்கான பொதுச் சின்னத்திற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதத்திற்குள் அளிக்கலாம். அனைத்து மனுக்களும் ஆய்வு செய்யப்பட்டு, சின்ன ஒதுக்கீடு தொடர்பான இறுதி முடிவு டிசம்பர் 2025 இறுதிக்குள் எடுக்கப்படும்.

இதன் மூலம், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் அதிகாரப்பூர்வமாக சின்னத்தை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய் எந்த சின்னத்தைத் தேர்வு செய்வார் என்ற கேள்வி அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஆவலுடன் எதிர்நோக்கும் தலைப்பாக மாறியுள்ளது.