Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கிளப்பில் மாமூல், வழக்கை விசாரிக்க லஞ்சம் தி.நகர் காவல் மாவட்டத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி

சென்னை: தி.நகர் காவல் மாவட்டத்தில் கிளப் ஒன்றில் மாமூல் வசூலித்ததாகவும், அதேபோல் வழக்கு ஒன்றில் விசாரிக்க லஞ்சம் பெற்றதாக 2 இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்ற அன்றே, காவல்துறையில் ஒழுக்கம் இல்லாமல் பணியாற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதேநேரம், அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அவரவர் காவல் எல்லையில் ரோந்து பணிகள் மற்றும் சாலைகளில் வாகன சோதனைகள் நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை பெருநகரில் உள்ள 104 காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் ரவுடிகளை இருப்பிடத்திற்கே நேரில் சென்று கண்காணித்து நடவடிக்கை எடுத்தும், வாகன சோதனை மற்றும் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், பொதுமக்களை பாதுகாக்கும் பணியில் முறையற்ற வகையில் செயல்படும் இன்ஸ்பெக்டர்கள் மீது புகார்கள் ஏதேனும் வந்தால், அந்த புகாரின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் அது உறுதியானால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில் தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான இரண்டு காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் வழக்கு ஒன்றில் விசாரணை நடத்த லஞ்சம் பெற்றதாகவும், மற்றொரு இன்ஸ்பெக்டர் தனது காவல் எல்லையில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் மாமூல் வசூத்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அருண் தி.நகர் துணை கமிஷனர் அங்கித் ஜெயின் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர் நடத்திய விசாரணையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மாமூல் மற்றும் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதுதொடர்பாக துணை கமிஷனர் அங்கித் ஜெயின் தனது விசாரணை அறிக்கையை கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதன்படி தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான 2 காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 2 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.