Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மலை மைனா (Common hill myna)

மலை மைனா (Common hill myna) பறவையானது பொதுவாக மைனா குடும்பத்தைச் (Starling) சார்ந்தது. இப்பறவை தோற்றத்தில் சாதாரண மைனாவிலிருந்து வேறுபடுகிறது. இப்பறவை தெற்காசியாவையும், தென்கிழக்காசியாவின் மலைப்பகுதியையும் பூர்வீகமாகக்கொண்டது. இவற்றில் இலங்கை மலைமைனா இதன் துணை இனமாக கருதப்படுகிறது. மேலும் இவற்றில் என்கோனொ தேவுகளிலும், (Enggano hill myna), நியாஸ் மலை மைனாவும் (Nias hill myna) இக்குடும்பத்தில் சேரும். இந்தியாவில் நீலகிரி மலைக்காடுகளில் தென்மலை மானா (Southern hill myna) என்ற இனமும் இதிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. இது சத்தீசுகர் மாநிலப்பறவையாகும். இதன் தலைப்பகுதிக்கும் கீழே கழுத்துப்பகுதி சற்று சதைப்பிடிப்புடன், ஆரஞ்சு-மஞ்சள் திட்டுகளுடன் சாதாரண மைனாவை விட வேறுபட்டுக் காணப்படுகிறது. 29 செமீ நீளம்கொண்டு சாதாரண மைனாவை விட உருவத்தில் பெரியதாகக் காணப்படுகிறது.

இதன் தோகை உடல் முழுவதும் பளபளப்பான கரும் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. தலை மற்றும் கழுத்திலும் ஊதா நிறம்கொண்டு தோற்றமளிக்கிறது. இதன் இறக்கைகள் இரண்டும் வெள்ளை நிறத்தில் பெரியதாக இருக்கும். ஆனால் அமர்ந்திருக்கும்போது மூடப்பட்டு இருக்கும். இதன் அலகுப்பகுதியும், கால் பகுதியும் உறுதியாக உள்ளது. இதன் பிடரியிலும், கண்ணின் கீழ்ப் பகுதியிலும் மஞ்சள் நிறம் உள்ளது. பொது மைனாவிலிருந்தும், ஏரி மைனாவிலிருந்தும் இதன் கண் ஓர வட்டம் வேறுபட்டிருக்கும். இவற்றில் ஆண் பெண் இரண்டுமே ஒரே மாதிரியாகக் காணப்படுகிறது. இவற்றில் ஆண் பெண் மைனாக்கள் குரலால் வித்தியாசப்படுகிறது.

இந்த மைனா இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள குமாயன் பிரிவு, நேபாளம், சிக்கிம், பூடான் மற்றும் அருணாசலப் பிரதேசம் மற்றும் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள சில பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் பிலிப்பைன்ஸ், வடக்கு இந்தோனேசியா, தெற்கு சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. இவை மரத்தின் பொந்துகளில் மூன்று அல்லது நான்கு முட்டைகளிட்டு குஞ்சு பொரிக்கிறது.