Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும்; அதன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து முதலமைச்சர் நலம் விசாரித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதில் '39 பேரும் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டனர். பிரேத பரிசோதனை செய்ய 11 பேர் கொண்ட மருத்துவக் குழு உள்ளது. காலை 7 மணிக்குள் பிரேத பரிசோதனை முடிந்து அனைத்து உடல்களும் ஒப்படைக்கப்படும்" என மருத்துவர் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; "மிகுந்த துயரத்தோடும், கனத்த இதயத்தோடும் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். கரூரில் விவரிக்க முடியாத அளவுக்கு ஒரு சோக சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை விவரிக்கக்கூட மனம் வரவில்லை. வந்த செய்திகள் எல்லாம் என் மனதை கலங்கடித்தது.தகவல் அறிந்த உடனே அது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தேன்.

உயிரிழப்பு செய்திகள் வரத் தொடங்கியதும் அமைச்சர்களை உடனே கரூர் செல்ல உத்தரவிட்டேன். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அனுப்பி வைத்தேன்.கரூரை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள், மருத்துவர்களை கரூர் செல்ல உத்தரவிட்டேன். ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்தது இதுவரை நடக்காதது. இனி நடக்கக் கூடாது.

துயரமான காட்சிகளை பார்த்த போது என் மனதை கலங்கடித்தன. அதனால் இரவோடு இரவாக கரூர் வந்தேன். அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும். அதன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.